மின் நுகர்வோரின் மின்சாரம் துண்டிக்கப்படும் அபாயம்.

 


அதிக கட்டணத்தை செலுத்த முடியாத 600,000க்கும் மேற்பட்ட மின் நுகர்வோரின் மின்சாரம் துண்டிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மின்சார சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் மிகவும் ஆபத்தில் இருப்பதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. பொருளாதார நெருக்கடியின் ஆரம்பத்திலிருந்து அதிக மின்சாரம் மற்றும் நீர் கட்டணம் செலுத்துவது 40 வீதத்தால் குறைந்துள்ளதாக மின்சாரம் மற்றும் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபைகளின் அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

 இதேவேளை, கடந்த 22ஆம் திகதி நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ், அதிக மின்சாரக் கட்டணத்தினால் பெருந்தோட்டங்களில் உள்ள பல குடிசை வீடுகள் விரைவில் இருள் சூழ்ந்துவிடும். பெருந்தோட்டங்களைச் சேர்ந்த குறைந்த வருமானம் பெறும் மக்கள் அதிக மின்சாரக் கட்டணத்தைச் செலுத்தவே முடியாத நிலையில் உள்ளதாகத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர், தோட்ட மக்களுக்கு மின்சாரக் கட்டணத்தில் நிவாரணம் வழங்குமாறு கோரிக்கை விடுத்தார்.

 இதற்கிடையில், அதிக மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டணங்கள் காரணமாக, மின்சாரம் மற்றும் தண்ணீரை மோசடியாகப் பெறும் சம்பவங்களும் அதிகரித்துள்ளதாகவும், இது எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சட்ட விரோதமாக மின்சாரம் மற்றும் தண்ணீரைப் பெறும் நபர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்த திணைக்களத்தின் தலைவர்கள் முடிவெடுத்துள்ளனர்.

அதிக மின்சாரம் மற்றும் குடிநீர் கட்டணம் வசூலிப்பதால், அன்றாட தேவைக்காக செலவிட வேண்டிய பணத்தை, அந்த கட்டணத்தை செலுத்த செலவிட வேண்டியுள்ளதாக, நுகர்வோர் கூறுகின்றனர். இலங்கையின் மொத்த மின்சார பாவனையாளர்களின் எண்ணிக்கை சுமார் அறுபது இலட்சம். மொத்த குடிநீர் இணைப்புகளின் எண்ணிக்கை 24 இலட்சம்.