ஐந்து வயதுக்கு குறைந்த பிள்ளைகளையுடைய தாய்மார் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு தடைவிதிக்கப்பட வேண்டியது அவசியமாகும்.

 


ஐந்து வயதுக்கு குறைந்த பிள்ளைகளையுடைய தாய்மார் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு தடைவிதிக்கப்பட வேண்டியது அவசியமாகும் என்று மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இரண்டு வயது ஒரு மாதத்தை அடைந்த குழந்தைகளின் தாய்மார் வெளிநாடுகளுக்கு செல்ல முடியும் என்பதே தற்போதைய நியதியாக காணப்படுகின்றது. எனினும் இது குழந்தைகளுக்கு இழைக்கப்படும் பாரிய அநீதியாகும்.

இரண்டு வயது என்பது குழந்தைகள் கதைப்பதற்குக்கூட சிரமப்படும் காலப்பகுதியாகும். எனவே தாய்மார் வெளிநாடு செல்வதற்கான குழந்தைகளின் வயது எல்லையை 5ஆக அதிகரிக்க வேண்டும்.

எனவே இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கவனத்துக்குக் கொண்டு சென்றோம்.

குழந்தை ஐந்து வயதை அடையும் வரை அதனது தாய் குழந்தையை பரமாரிக்க வேண்டியது அவசியமாகும்.

ஒரு விடயத்தை கூறியே ஆக வேண்டும். குழந்தைகள், சிறுவர்கள், சிறுமிகள் அதிகளவு துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகும் இடங்களாக வீடுகளே காணப்படுகின்றன.

சில சந்தர்ப்பங்களில் குழந்தைகள் தந்தைமாரினால் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

இவ்வாறான சூழ்நிலையில் தாய் தனது குழந்தைகள், சிறுவர்களை விட்டுவிட்டு வெளிநாட்டுக்கு செல்வது என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயமல்ல.

இதனால் வெளிநாட்டுக்கு செல்லும் தாயும் மனவுழைச்சலுக்கு உள்ளாகக்கூடும்.

தனது பிள்ளைகளின் நினைப்பில் தாய்மாரும் தங்களது பணிகளை வெளிநாடுகளில் சிறந்த முறையில் முன்னெடுக்க முடியாமல் போகும்.

எனவே அரசாங்கமானது இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.