தாயக ஊற்று அமைப்பின் ஏற்பாட்டில், அதன் ஸ்தாபகத் தலைவரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வைத்தியர் இ.சிறிநாத் அவர்களின் வழிகாட்டலில், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான சிறப்பு வலுவூட்டல் செயலமர்வு அண்மையில் (19.07.2026) வந்தாறுமூலை மத்திய கல்லூரியில் சிறப்பாக நடைபெற்றது.
மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட ஏறாவூர்பற்று கல்விக் கோட்டத்தைச் சேர்ந்த சித்தாண்டி கிராமத்துப் பாடசாலைகளான:
மட்/ககு/சித்தாண்டி இராமகிருஷ்ண மிஷன் வித்தியாலயம்
மட்/ககு/உதயன்மூலை விவேகானந்தா வித்தியாலயம்
மட்/ககு/சித்தாண்டி சித்திவிநாயகர் வித்தியாலயம்
மட்/ககு/சித்தாண்டி அலைமகள் வித்தியாலயம்
ஆகிய பாடசாலைகளைச் சேர்ந்த சுமார் 150 மாணவர்கள் இச் செயலமர்வில் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் நோக்கில் நடத்தப்பட்ட இக் கருத்தரங்கில், பிரபல வளவாளர் திரு. கே. ரிசீகரன் அவர்கள் கலந்துகொண்டு மாணவர்களுக்கான பரீட்சை வழிகாட்டல்களையும் பயிற்சிகளையும் வழங்கினார். மேலும், மாணவர்களின் கற்றல் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் கடந்த கால வினா-விடை கையேடுகளும் கற்றல் கோப்புகளும் இலவசமாக வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத், ஏறாவூர்பற்று பிரதேச சபையின் தவிசாளர் மு.முரளிதரன், பிரதேச சபை உறுப்பினரும் தாயக ஊற்று அமைப்பின் உப தலைவருமான த.பிரபாகரன், பிரதேச சபை உறுப்பினர் சி.வவானந்தன் ஆகியோருடன் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், தாயக ஊற்று அமைப்பின் உறுப்பினர்கள், சிகண்டி அறக்கட்டளை அமைப்பின் பிரதிநிதிகள், பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பலர் கலந்து சிறப்பித்தனர்.






