மின்சார வாகனங்களுக்கான வரிச்சலுகைகளை வழங்குவது தொடர்பில் நாடாளுமன்றக் குழுவொன்று ஆராய்ந்துள்ளது.

 


இலங்கையில் வாகன இறக்குமதி வரிகளை எளிமைப்படுத்துவது மற்றும் மின்சார வாகனங்களுக்கான வரிச்சலுகைகளை வழங்குவது தொடர்பில் நாடாளுமன்றக் குழுவொன்று ஆராய்ந்துள்ளது.

கடந்த 18ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கூட்டத்தின்போது, வாகன இறக்குமதி தொடர்பான வரி நடைமுறைகள் மற்றும் மின்சார வாகனங்களுக்கான சலுகைகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதன்போது, வாகன இறக்குமதியின்போது விதிக்கப்படும் வரிகள், சுங்க மதிப்பீட்டு நடைமுறைகள் மற்றும் இறக்குமதியாளர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, மின்சார வாகனங்களைப் பொதுமக்கள் இலகுவாகக் கொள்வனவு செய்யும் வகையில் வரிச்சலுகைகளை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டுள்ளன.

அத்துடன், பயன்படுத்தப்பட்ட மின்சார வாகன மின்கலங்களைப் பாதுகாப்பாக அகற்றுவதற்கான முறையான கட்டமைப்பை உருவாக்குவது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

மேலும், இறக்குமதிப் பொருட்களை சுங்கத்திலிருந்து விடுவிப்பதில் ஏற்படும் தாமதங்களைக் குறைக்கும் நோக்கில், அரச நிறுவனங்களுக்கு இடையில் ஒருங்கிணைந்த டிஜிட்டல் கட்டமைப்பை உருவாக்க வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டுள்ளது.