வானொலி, இதழியல், கலை இலக்கியம் எனப் பல தளங்களில் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாகப் பணியாற்றிய ஊடக ஆளுமைக்கு அஞ்சலி!

 




இலங்கையின் தமிழ் கத்தோலிக்க ஊடகத்துறையில் தனித்துவமான அடையாளத்தைப் பதித்து, வானொலி, இதழியல், கலை இலக்கியம் மற்றும் சமயத் தொடர்பாடல் எனப் பல்வேறு தளங்களில் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய திருவாளர் யேசுதாஸ் எனும் இயற்பெயரைக் கொண்ட மலர்வேந்தன் அவர்கள், 16.11.2026 அன்று இவ்வுலக வாழ்விலிருந்து விடைபெற்றார்.

மலர்வேந்தன் என இலக்கிய மற்றும் ஊடக உலகில் அறியப்பட்ட இவர், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் கத்தோலிக்க சேவையில் வானொலிக் கலைஞராகப் பணியாற்றியதுடன், திருகோணமலை – மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் தமிழ் கத்தோலிக்க மாத இதழான 'தொண்டன்' சஞ்சிகையின் ஆசிரியர் குழுவிலும் முக்கிய பங்காற்றியவர்.

வறுமையிலும் வளர்ந்த கலை ஆர்வம்

சிறுவயதிலேயே தந்தையை இழந்த மலர்வேந்தன் அவர்கள், தாயாரின் அரவணைப்பிலும் வழிகாட்டுதலிலும் வளர்ந்தவர். குடும்பத்தின் பொருளாதாரச் சுமையைத் தாங்குவதற்காக அவரது தாயார் கடையப்பம் தயாரித்து விற்பனை செய்து பிள்ளைகளை வளர்த்துள்ளார்.

தனது இரண்டாம் நிலைக் கல்வியைத் தொடர்ந்த காலத்திலேயே, மட்டக்களப்பில் ஸ்ரபன் என்பவரின் சவப்பெட்டிக் கடையில் பணியாற்றி குடும்பத்திற்கு உதவியுள்ளார்.

சிறுவயது முதலே பாடல், சங்கீதம் ஆகியவற்றில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த அவர், மட்டக்களப்பின் புகழ்பெற்ற சங்கீத பூஷணம் ராஜூ மாஸ்டரிடம் சங்கீதம் பயின்றார். அத்துடன், யோகாசனக் கலையிலும் ஈடுபாடு கொண்டிருந்ததுடன், ஒழுக்கமும் பக்தியும் நிறைந்தவராகவும் திகழ்ந்தார்.

மறைப்போதகராகப் பயிற்சி – ஊடகத்துறைக்கான ஆரம்பம்

மலர்வேந்தன் அவர்களின் வாழ்வில் முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது, அன்றைய திருகோணமலை – மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் ஆயராகப் பணியாற்றிய மறைந்த பேரருட்திரு இக்னேஷியஸ் கிளேனி ஆண்டகை மற்றும் துணை ஆயராகப் பணியாற்றிய மறைந்த பேரருட்திரு வ. தியோகுப்பிள்ளை ஆண்டகை ஆகியோரின் காலப்பகுதியாகும்.

அக்காலத்தில் மறைமாவட்ட மறைக்கல்விப் பணியின் முக்கிய அங்கமாக விளங்கிய பொதுநிலையினர் இல்லறத் தூதுவர்களுள் ஒருவராகப் பயிற்சி பெறுவதற்காக, மறைந்த அருட்பணி ஹென்றி பொன்னையா அடிகளாரின் வழிகாட்டுதலில் 1960களின் பிற்பகுதியில் இந்தியாவின் தமிழ்நாடு, திண்டிவனத்தில் அமைந்திருந்த விவிலிய, திருவழிபாட்டு, மறைக்கல்வி முப்பணி நிலையத்திற்கு இரண்டு ஆண்டுகாலப் பயிற்சிக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்கு பயிற்சி பெற்ற காலத்தில் தனது இசை மற்றும் பாடல் ஆர்வத்தையும் மேலும் வளர்த்துக்கொண்ட அவர், நாடு திரும்பிய பின்னர் மறைமாவட்டத்தில் மறைப்போதகராகப் பணியாற்றினார்.

அந்தக் காலப்பகுதியில் மறைமாவட்ட சமூகத் தொடர்பு நிலையத்தின் இயக்குநராகப் பணியாற்றிய மறைந்த அருட்பணி அந்தனி ஜான் அழகரசன் அடிகளாரின் வழிகாட்டுதலுடன் ஊடகத்துறையிலும் தனது பயணத்தை ஆரம்பித்தார்.

இலங்கை வானொலியின் கத்தோலிக்க சேவையில் தனித்துவமான பங்களிப்பு

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ்க் கத்தோலிக்க நிகழ்ச்சிகளைத் தரமான முறையில் முன்னெடுக்கும் நோக்கில், இலங்கை ஆயர்கள் பேரவையினால் கொழும்பில் தனியான கத்தோலிக்க சமூகத் தொடர்பு நிறுவனம் ஒலிப்பதிவுக் கூடத்துடன் ஆரம்பிக்கப்பட்டது.

அக்காலத்தில் இலங்கை வானொலியின் தமிழ்க் கத்தோலிக்க நிகழ்ச்சிகளுக்குப் பொறுப்பாக விளங்கியவர், 'கரவையூர்ச் செல்வம்' எனப் பரவலாக அறியப்பட்ட அருட்பணி சா. ம. செல்வரெட்ணம் (அமதி) அடிகளார் ஆவார்.

அருட்பணி அந்தனி ஜான் அழகரசன் அடிகளாருக்கும் அருட்பணி செல்வரெட்ணம் அடிகளாருக்கும் இடையிலான நட்பின் ஊடாக மலர்வேந்தன் அவர்கள் வானொலித் துறையில் மேலும் வாய்ப்புகளைப் பெற்றார்.

1970களின் பிற்பகுதியில் வானொலிக் கத்தோலிக்க நிகழ்ச்சிகளின் பொறுப்பினை ஏற்றுக்கொண்ட மலர்வேந்தன் அவர்கள், 'புதிய உலகம்', 'சிறுவர் உலகம்', 'கத்தோலிக்க நற்சிந்தனை' உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் தயாரிப்பு மற்றும் ஒலிபரப்புப் பணிகளில் ஈடுபட்டார்.

பின்னர் உயர்கல்விக்காகச் சென்ற அருட்பணி செல்வரெட்ணம் அடிகளார் 1982ஆம் ஆண்டு நாடு திரும்பியபோது, மலர்வேந்தன் அவர்கள் அவரை 'புதிய உலகம்' நிகழ்ச்சிக்காகச் செவ்வி கண்டிருந்தார்.

அந்தச் சந்திப்பின்போது, மலர்வேந்தன் அவர்கள் தன்னைப்போன்று சிறப்பாகப் பணியாற்றுவதாகவும், தன்னைவிடச் சிறப்பாகச் செயற்படுவதாகப் பலரும் கூறியதைக் கேட்டு மகிழ்ச்சியடைந்ததாகவும் அருட்பணி செல்வரெட்ணம் அடிகளார் குறிப்பிட்டிருந்தார்.

தனது பணிக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாகவும் மனநிறைவாகவும் அந்தப் பாராட்டை மலர்வேந்தன் அவர்கள் கருதியிருந்தார். இது தொடர்பான பதிவு 1999 செப்டெம்பர் மாத 'தொண்டன்' சஞ்சிகையில் வெளியான 'புதிய உலகம்' நிகழ்ச்சியின் 25ஆவது ஆண்டு, ஆயிரமாவது மலர் தொடர்பான கட்டுரையில் இடம்பெற்றுள்ளது.

1983 இன வன்முறை – மட்டக்களப்பில் தொடர்ந்த ஊடகப் பணி

1983ஆம் ஆண்டு கொழும்பில் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்ற இன வன்முறைகள் காரணமாக, கொழும்பிலிருந்து முன்னெடுத்து வந்த வானொலிப் பணிகள் தடைப்பட்ட நிலையில், மலர்வேந்தன் அவர்கள் மட்டக்களப்பிற்குத் திரும்பினார்.

அந்த இக்கட்டான சூழலில் அவருக்கு உறுதுணையாக இருந்தவர் அன்றைய திருகோணமலை – மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயராகப் பணியாற்றிய ஓய்வுநிலை ஆயர் பேரருட்திரு யோசப் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை ஆவார்.

மறைமாவட்டத்திற்கென தனியான ஒலிப்பதிவுக் கூடத்தை உருவாக்கி, கத்தோலிக்க வானொலி நிகழ்ச்சிகளைத் தயாரித்து இலங்கை வானொலிக்கு அனுப்பும் திட்டத்தை முன்னெடுத்த அவர், 1983ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் மறைமாவட்ட சமூகத் தொடர்பு நிறுவனத்தின் இயக்குநராகப் பணியாற்றிய அருட்பணி சி. பி. இராஜேந்திரம் அடிகளாரின் கீழ் மலர்வேந்தனையும் இணைத்துக்கொண்டார்.

இதன் மூலம் மட்டக்களப்பிலிருந்தே கத்தோலிக்க வானொலி நிகழ்ச்சிகளைத் தயாரித்து ஒலிபரப்புவதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

'தொண்டன்' சஞ்சிகையில் 32 ஆண்டுகாலப் பணி

வானொலித் துறையில் மட்டுமன்றி அச்சு ஊடகத்துறையிலும் தனது ஆளுமையை வெளிப்படுத்திய மலர்வேந்தன் அவர்கள், 1983ஆம் ஆண்டு முதல் மறைமாவட்ட மாதாந்த சஞ்சிகையான 'தொண்டன்' இதழின் இணை ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கினார்.

1969ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட 'தொண்டன்' சஞ்சிகையின் வளர்ச்சிக்கும் உள்ளடக்க மேம்பாட்டிற்கும் 1983 முதல் 2015ஆம் ஆண்டு வரை சுமார் 32 ஆண்டுகள் அவர் ஆற்றிய பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த நீண்டகாலப் பணியினூடாகப் பல அருட்பணியாளர்களுடன் இணைந்து கத்தோலிக்க சமய வளர்ச்சிக்கும் தமிழ் இலக்கியச் செழுமைக்கும் பெரும் பங்களிப்பை வழங்கினார்.

குறிப்பாக, புதிய படைப்பாளர்களை இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்துதல், பழம்பெரும் இலக்கியவாதிகளின் படைப்புகளையும் ஆளுமைகளையும் வெளிக்கொணர்தல், சிறப்பு நேர்காணல்கள் மற்றும் சிந்தனைக் கட்டுரைகளை வெளியிடுதல் எனப் பல்வேறு பணிகளை முன்னெடுத்தார்.

மேலும், 'தொண்டன்' சஞ்சிகையின் சிறப்பு ஆண்டு இதழ்களை வெளியிடுவதிலும், சமூகத் தொடர்பு விருது வழங்கும் நிகழ்வுகளை முன்னெடுப்பதிலும் முக்கிய பங்காற்றினார்.

நான்கு தளங்களில் நிலைத்திருக்கும் பங்களிப்பு

மலர்வேந்தன் அவர்களின் ஊடக மற்றும் இலக்கியப் பணிகளை நான்கு முக்கிய தளங்களில் நோக்க முடியும்.

  1. கத்தோலிக்க இதழியல்: 'தொண்டன்' சஞ்சிகையின் ஆசிரியர் குழுவில் இணைந்து மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக அதன் வளர்ச்சிக்கும் உள்ளடக்க மேம்பாட்டிற்கும் பங்களித்தமை.

  2. படைப்பிலக்கியம்: ஆசிரியர் தலைப்புகள், சிறப்பு நேர்காணல்கள், சிந்தனைக் கட்டுரைகள், ஆக்கங்கள் மற்றும் சிறப்பு இதழ்கள் வாயிலாக தனது எழுத்தாற்றலை வெளிப்படுத்தியமை.

  3. கத்தோலிக்க வானொலித் தொடர்பாடல்: இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் கத்தோலிக்க சேவையுடன் இணைந்து 'புதிய உலகம்', 'சிறுவர் உலகம்', கத்தோலிக்க நற்சிந்தனைகள் மற்றும் விழாக்காலச் சிறப்பு நிகழ்ச்சிகளில் ஆற்றிய பங்களிப்பு.

  4. சமய மற்றும் சமூகத் தொடர்பாடல்: வானொலி மற்றும் அச்சு ஊடகங்கள் வாயிலாக கிறிஸ்தவச் சிந்தனைகளையும் விழுமியங்களையும் தமிழ் மக்களிடம் கொண்டு சேர்த்தமை.

ஊடக உலகில் என்றும் நிலைத்திருக்கும் பெயர்

மலர்வேந்தன் அவர்களை வெறுமனே ஒரு வானொலிக் கலைஞராக மட்டும் நோக்குவது அவரது பணியின் முழுமையை வெளிப்படுத்தாது.

வானொலி ஒலிபரப்பு, கத்தோலிக்க சமயத் தொடர்பாடல், தமிழ் இதழியல், இசை, பாடலாக்கம் மற்றும் படைப்பிலக்கியம் எனப் பல்வேறு தளங்களில் அவர் ஆற்றியுள்ள பங்களிப்பு கிழக்கிலங்கை கத்தோலிக்க ஊடக வரலாற்றில் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது.

ஒரு பொதுநிலையினராக, இல்லறத் தூதுவராகவும், மறைப்போதகராகவும், வானொலிக் கலைஞராகவும், இதழியல் பணியாளராகவும் தனது வாழ்நாளின் பெரும்பகுதியைச் சமய மற்றும் சமூகப் பணிக்காக அர்ப்பணித்தவர்.

அவரது பணியால் வழிநடத்தப்பட்ட பலரும் ஊடக மற்றும் இலக்கியத் துறைகளில் தொடர்ந்து பயணிப்பதற்கான வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர்.

இவ்வாறு கத்தோலிக்க ஊடகத்துறைக்கும் தமிழ் இலக்கிய உலகிற்கும் தனது வாழ்நாளை அர்ப்பணித்த மலர்வேந்தன் (யேசுதாஸ்) அவர்களின் மறைவு, கிழக்கிலங்கை ஊடக மற்றும் கத்தோலிக்க சமூகத்திற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.

அன்னாரின் ஆன்மா இறைவனில் இளைப்பாறவும், அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

காலம் கடந்தாலும் அவரது பணிகள் பேசும்; மலர்வேந்தன் என்ற பெயர் கத்தோலிக்க ஊடக வரலாற்றில் நிலைத்திருக்கும்.