கிழக்கு மாகாணத்தில் அக்டோபர் 13 முதல் 26 வரையான காலப்பகுதியில் நிலவக்கூடிய வானிலை நிலவரம் குறித்த முழுமையான செய்தி விவரங்கள் வெளியாகியுள்ளன. கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புவியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கிருபா இராஜரெத்தினம் இந்த வானிலை நிலைமை குறித்த தகவல்களைத் தொகுத்து வழங்கியுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரை, அக்டோபர் 13 முதல் 26 வரையிலான காலப்பகுதியில் சாதாரண அளவிலான மழை கிடைக்கும் வாய்ப்புகள் காணப்படுகின்றன. குறிப்பாக இற்றைத்தினமான செவ்வாய்க்கிழமை அன்று ஒப்பிட்டளவில் 20 முதல் 30 மில்லி மீற்றர் வரை மழை பொழிவதற்கான வாய்ப்புகள் உள்ள நிலையில், அதனைத் தொடர்ந்துவரும் நாட்களில் மழையானது மிகவும் குறைவாகவே காணப்படும்.
அம்பாறை மாவட்டத்தில், குறிப்பிட்ட இந்த நாட்களில் 10 மில்லி மீற்றருக்கும் குறைவான குறைந்த அளவிலான மழைவீழ்ச்சியே கிடைக்கப்பெறும். இதனால் விவசாயிகளின் விதைப்பு நடவடிக்கைகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது எனவும், தொடர்ந்துவரும் நாட்களில் தொடர்ச்சியான கனமழை பெயவதற்கான வாய்ப்புகள் இல்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
திருகோணமலை மாவட்டத்தில் இன்று செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய நாட்களில் குறிப்பிடத்தக்க அளவில் மழைவீழ்ச்சி கிடைக்க வாய்ப்புள்ளது. இந்நாட்களில் 15 முதல் 20 மில்லி மீற்றர் வரை மழை கிடைக்கக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டாலும், இங்கும் விதைப்பு நடவடிக்கைகளைப் பாதிக்கக்கூடிய அளவுக்குத் தொடர்ச்சியான கனமழை இருக்காது.
ஒட்டுமொத்தமாக இந்த நாட்களில் கிழக்குப் பகுதியில் பாரிய மழைவீழ்ச்சியோ அல்லது வெள்ள நிலைமைகளோ உருவாவதற்கான வானிலை சூழல் காணப்படவில்லை. சமுத்திர மேற்பரப்பு வெப்பநிலை வெப்பமடைந்திருந்தாலும்கூட, பலமிக்க தாழ்வுமண்டலம் உருவாவதற்கான ஏதுநிலைகள் பெரியளவில் விருத்தியடையவில்லை. இதன் காரணமாக விவசாய நடவடிக்கைகளைத் தடையின்றித் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கு ஏற்றகேயான அனுகூலமான வானிலை நிலையே கிழக்கில் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
.jpg)




