மட்டக்களப்பில் பேருந்துகளுக்கு விசேட சோதனை! – பயண அனுமதிப்பத்திரம், சூழல் பாதிப்பு எரிபொருள் பாவனை குறித்து அதிரடி நடவடிக்கை










வீதி விபத்துகளைக் குறைக்கவும், சட்டவிரோத பேருந்து சேவைகளைக் கட்டுப்படுத்தவும் விசேட திட்டங்கள்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் நெடுந்தூரப் பயண சேவைகளில் ஈடுபடும் பேருந்துகளின் பயண அனுமதிப்பத்திரங்கள் மற்றும் சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான எரிபொருள் பாவனை தொடர்பில் விசேட சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வீதி விபத்துகளைக் குறைத்தல், சட்டவிரோத பேருந்து சேவைகளைக் கட்டுப்படுத்தல் மற்றும் பொதுமக்களின் போக்குவரத்துத் தேவைகளுக்கு ஏற்ப புதிய பேருந்து பயண அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டப் போக்குவரத்துக் குழுக் கூட்டம், பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கந்தசாமி பிரபு தலைமையில், மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜின் ஒருங்கிணைப்புடன் நேற்று பழைய மாவட்ட செயலக மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது, மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து ஆரம்பமாகும் மற்றும் மாவட்டத்தை ஊடறுத்துச் செல்லும் நெடுந்தூரப் பேருந்து சேவைகளின் பயண அனுமதிப்பத்திரங்கள் தொடர்பில் விசேட சோதனைகளை முன்னெடுப்பது குறித்து ஆராயப்பட்டது.

குறித்த பேருந்து சேவைகளில் ஈடுபடும் சில பேருந்துகள் சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான எரிபொருட்களைப் பயன்படுத்துவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், அவை தொடர்பிலும் சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்துத் தீர்மானிக்கப்பட்டது.

மேலும், சட்டவிரோத பேருந்து சேவைகளைக் கட்டுப்படுத்துவதுடன், பொதுமக்களின் தேவைகளுக்கு ஏற்ப புதிய பேருந்து பயண அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான கேள்வி கோரல் நடவடிக்கைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

இதற்கு மேலதிகமாக, போக்குவரத்து உட்கட்டமைப்பு அபிவிருத்தி, கிராமிய வீதிகள் மற்றும் பாலங்களின் நிர்மாணப் பணிகளின் முன்னேற்றம், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் திட்டங்கள், பொதுப் போக்குவரத்துச் சேவைகள் மற்றும் வீதிப் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு விடயங்களும் விரிவாக ஆராயப்பட்டன.

அத்துடன், தித்வா புயலினால் பாதிக்கப்பட்ட பாலங்களின் நிர்மாணப் பணிகளின் முன்னேற்றம், மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் வீதி விபத்துகளைக் குறைப்பதற்கான வேலைத்திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் திட்டமிடல் பணிப்பாளர் நாயகம் டபிள்யூ. எச். கே. டி. பி. ரத்நாயக்க உள்ளிட்டோர் பங்கேற்ற இக்கூட்டத்தில், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மாகாணப் பணிப்பாளர், வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், பிரதம பொறியியலாளர்கள், திட்டமிடல் பணிப்பாளர்கள், பொறியியலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், உயர் அதிகாரிகள் மற்றும் துறைசார் நிபுணர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.