மட்டக்களப்பு, கரடியனாறு பிராந்திய விவசாய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையத்தில் நிலவும் குறைபாடுகள் தொடர்பில் ஆராய்வதற்காக, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இளையதம்பி சிறிநாத் கடந்த 15.10.2026 அன்று நேரடி கள விஜயமொன்றை மேற்கொண்டார்.
இதன்போது, நிலையத்தின் உதவி விவசாயப் பணிப்பாளர் மற்றும் உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடிய அவர், அங்கு நிலவும் தேவைகள் மற்றும் குறைபாடுகள் தொடர்பில் கேட்டறிந்தார்.
நிலையத்தின் உட்கட்டமைப்பு வசதிகளில் காணப்படும் குறைபாடுகள், ஆளணிப் பற்றாக்குறை, மண் பரிசோதனை மற்றும் பூச்சி, பீடைத் தாக்கங்களை ஆய்வு செய்வதற்கான ஆய்வுகூட வசதியின்மை, போக்குவரத்து வசதிகள் குறைபாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டன.
மேலும், கடமை நேரம் நிறைவடைந்த பின்னர் உத்தியோகத்தர்கள் பேருந்துகளுக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலைமை குறித்தும் அதிகாரிகள் நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர்.
அதிகாரிகளின் கோரிக்கைகளைக் கேட்டறிந்த நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இளையதம்பி சிறிநாத், குறித்த பிரச்சினைகளை விவசாய அமைச்சரிடமும் அமைச்சு மட்டக் கூட்டங்களிலும் எடுத்துரைத்து, நிலையத்தின் அபிவிருத்தியை மேம்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க முயற்சிப்பதாக உறுதியளித்தார்.
இதற்கு முன்னதாக, கடந்த 07.10.2026 அன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், கரடியனாறு பிராந்திய விவசாய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையத்தை மீளக் கட்டியெழுப்புவதன் மூலம் கிழக்கு மாகாணத்தின் விவசாயத் துறையை மேலும் மேம்படுத்த முடியும் என வலியுறுத்தியிருந்தார்.
இக் கள விஜயத்தில் ஏறாவூர்ப்பற்று பிரதேச சபை உறுப்பினர்களான த. பிரபாகரன் மற்றும் கா. நாகேந்திரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
BATTI MEDIA










