"ஈஸ்டர் கொடூரத் தாக்குதலை நடத்திய 'அம்புகளுக்கு' தண்டனை வழங்கப்பட்டுவிட்ட போதிலும், அந்த 'அம்பை எய்த' உண்மையான சூத்திரதாரிகள் யார் என்பதை அம்பலப்படுத்தும் விசாரணைகள் தற்போது தீவிரமடைந்துள்ளன."
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சதித்திட்டம் தொடர்பில் கைது செய்யப்பட்டு, தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் அரச புலனாய்வுச் சேவை (SIS) பிரதானி, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேவை பரிசோதித்த மருத்துவக் குழுவின் 10 சிறப்பு வைத்தியர்களுக்கு எதிர்வரும் அக்டோபர் 6ஆம் திகதி நீதிமன்றில் நேரில் ஆஜராகுமாறு கொழும்பு நீதவான் பாஸன் அமரசேன அதிரடி அழைப்பாணை விடுத்துள்ளார்.
சுரேஷ் சாலேயின் இதயம் வீக்கமடைந்துள்ளதாகவும், அவரது இதயத் துடிப்பைக் கட்டுப்படுத்த அதிநவீன சாதனம் பொருத்தப்பட்டுள்ளதாகவும் மருத்துவக் குழுவினர் அளித்த அறிக்கையைத் தொடர்ந்து, விசாரணையைத் திசைதிருப்பவோ அல்லது தாமதப்படுத்தவோ முயற்சிகள் நடக்கிறதா என்ற கோணத்தில் குற்றப் புலனாய்வுத் துறை (CID) சிறப்பு மனுவைத் தாக்கல் செய்தது. இந்தத் தாக்குதலின் பின்னணியில் உள்ள நிழல் மனிதர்களையும், சூத்திரதாரிகளையும் சட்டத்தின் முன் நிறுத்தும் பொலிஸாரின் அதிரடி நகர்வாகவே நீதிமன்றின் இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது.





