வாகனேரி குளத்துமடு கிராமத்தின் நீண்டகால குடிநீர் பிரச்சினைக்கு பாராளுமன்ற உறுப்பினர் சிறிநாத் அவர்களின் முயற்சியில் நிரந்தரத் தீர்வு
மட்டக்களப்பு கோறளைப்பற்று தெற்கு, வாகனேரி குளத்துமடு கிராம மக்களின் நீண்டகால குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் கௌரவ இளையதம்பி சிறிநாத் அவர்களின் முயற்சியினால், இந்தியாவின் தமிழ்நாடு திருவண்ணாமலை ரோட்டரிக் கழகத்தின் நிதியுதவியுடன், மட்டக்களப்பு நகர் ரோட்டரிக் கழகத்தின் நடைமுறைப்படுத்தலில் அமைக்கப்பட்ட நீர் வழங்கல் மீள் புனரமைப்பு திட்டம் 18.10.2026 அன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் கௌரவ இளையதம்பி சிறிநாத் அவர்கள் கலந்து கொண்டு நீர் வழங்கல் மீள் புனரமைப்பு திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.
வாகனேரி குளத்துமடு பொதுமக்கள் மற்றும் கிராம மட்ட அமைப்புகளின் தொடர்ச்சியான கோரிக்கைகளுக்கு அமைவாக, கடந்த 01.08.2026 அன்று அப்பகுதிக்கு நேரில் விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் சிறிநாத் அவர்கள், மக்களின் குடிநீர் தேவைகள் மற்றும் அவர்கள் எதிர்நோக்கும் சவால்கள் குறித்து கேட்டறிந்தார்.
இதனைத் தொடர்ந்து, நிரந்தர நீர் வழங்கல் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக பாராளுமன்ற உறுப்பினரும் மட்டக்களப்பு நகர் ரோட்டரிக் கழகமும் இணைந்து, இந்திய திருவண்ணாமலை ரோட்டரிக் கழக நிர்வாகிகளிடம் கோரிக்கை முன்வைத்தனர்.
அக்கோரிக்கையை ஏற்றுக்கொண்ட திருவண்ணாமலை ரோட்டரிக் கழகத்தினர் இத்திட்டத்திற்கான நிதியுதவியை வழங்க உறுதியளித்தனர்.
இதனையடுத்து, கடந்த 26.09.2026 அன்று பாராளுமன்ற உறுப்பினர் சிறிநாத் மற்றும் மட்டக்களப்பு நகர் ரோட்டரிக் கழகப் பிரதிநிதிகள் நேரடியாக வாகனேரி குளத்துமடு கிராமத்திற்குச் சென்று கள நிலவரங்களைப் பார்வையிட்டதுடன், மக்களுடன் கலந்துரையாடி திட்டப் பணிகளை விரைவுபடுத்தினர்.
நீண்டகாலமாக நிலவி வந்த குடிநீர் பிரச்சினைக்கு விரைவான முறையில் நிரந்தரத் தீர்வு பெற்றுத் தந்தமையையிட்டு, கிராம மக்கள் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இளையதம்பி சிறிநாத் அவர்களுக்கும், தமிழ்நாடு திருவண்ணாமலை ரோட்டரிக் கழகத்திற்கும், மட்டக்களப்பு நகர் ரோட்டரிக் கழகத்திற்கும் தமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.
இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினரும் மட்டக்களப்பு நகர் ரோட்டரிக் கழகப் பிரதிநிதியுமான வைத்தியர் திரு.கருணாகரன், கோறளைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் திரு.ஞா.கோவிந்தராஜா, ஏறாவூர்பற்று பிரதேச சபை உறுப்பினர் திரு.த.பிரபாகரன், மட்டக்களப்பு நகர் ரோட்டரிக் கழக உறுப்பினர் திரு.ஜெகவண்ணன், கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள், ஆலய நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.


.jpeg)

.jpeg)

.jpeg)

.jpeg)


.jpeg)

.jpeg)




