EDITOR
மட்டக்களப்பு, கல்லடி உப்போடை இராமகிருஷ்ண மிஷனில் விஜயதசமியை முன்னிட்டு, குழந்தைகளுக்கு முதன்முதலாக எழுத்துக்களை அறிமுகப்படுத்தும் ‘வித்யாரம்பம்’ எனப்படும் ஏடு தொடங்கும் நிகழ்வு இன்று சிறப்பாக நடைபெற்றது.
மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் மேலாளர் சுவாமி நீலமானந்தா ஜீ மகராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மிஷனின் உதவி மேலாளரும் கலந்துகொண்டு சிறுவர்களுக்கு ஏடு தொடக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் பங்கேற்பதற்காகப் பெருமளவிலான பெற்றோர்கள் தமது குழந்தைகளை இராமகிருஷ்ண மிஷனுக்கு அழைத்து வந்திருந்தனர். இதன்போது, மிஷன் சுவாமிகள் குழந்தைகளின் விரல்களைப் பிடித்து அரிசியில் அகர முதல எழுத்துக்களை எழுதச் செய்து, அவர்களின் கல்விப் பயணத்தை ஆரம்பித்து வைத்தனர்.
கல்வியின் தொடக்கமாகக் கருதப்படும் வித்யாரம்பம் நிகழ்வு, குழந்தைகளின் அறிவு வளர்ச்சியும் கல்வி முன்னேற்றமும் சிறப்பாக அமைய வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் பெற்றோர்களால் முன்னெடுக்கப்படும் பாரம்பரிய நிகழ்வாகும்.
இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான ஆயுத பூஜை நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், அதனைத் தொடர்ந்து இன்று விஜயதசமி பக்திபூர்வமாக அனுஷ்டிக்கப்படுகிறது. ஆயுத பூஜையின்போது வழிபாட்டுக்காக வைக்கப்பட்ட புத்தகங்கள், கல்வி உபகரணங்கள் மற்றும் தொழில் கருவிகள் ஆகியவற்றை விஜயதசமி நாளில் மீண்டும் வழிபட்டு பயன்படுத்துவது பாரம்பரியமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
கல்வி, கலை, விளையாட்டு மற்றும் தொழில் உள்ளிட்ட புதிய முயற்சிகளை விஜயதசமி நாளில் ஆரம்பிப்பது நன்மையும் வளர்ச்சியும் தரும் என்பது மக்களின் பாரம்பரிய நம்பிக்கையாக உள்ளது. இதன் அடிப்படையில், சிறுவர்களுக்கு முதன்முதலாக எழுத்துக்களை அறிமுகப்படுத்தும் வித்யாரம்பம் நிகழ்வுகள் இலங்கையின் பல்வேறு ஆலயங்களிலும் சமய நிறுவனங்களிலும் இன்று நடைபெற்றன.
குழந்தைகளின் கல்விப் பயணத்தை ஆன்மீகச் சூழலில் ஆரம்பித்து வைக்கும் இத்தகைய நிகழ்வுகள், கல்வியின் முக்கியத்துவத்தையும் பாரம்பரிய மரபுகளின் தொடர்ச்சியையும் எடுத்துரைக்கின்றன.


























