விழிப்புலனற்றோரின் உரிமைகள் குறித்த விழிப்புணர்வை வலியுறுத்திய நிகழ்வில், தரிசனம் மாணவர்களின் விளையாட்டுத் திறமைக்கும் கௌரவம்!
சர்வதேச வெள்ளைப் பிரம்பு தினத்தை முன்னிட்டு, விழிப்புலனற்றோர் தொடர்பான சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் மட்டக்களப்பில் மாபெரும் ஊர்வலமொன்று முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு லயன்ஸ் கழகம், மாவட்டம் 306 D 10 மற்றும் மட்டக்களப்பு நொச்சிமுனை உதயம் விழிப்புலனற்றோர் சங்கம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த இவ்வூர்வலம், பழைய கல்லடிப் பாலத்திலிருந்து ஆரம்பமாகி கல்லடி உப்போடை துளசி மண்டபம் வரை சென்றடைந்தது.
இவ்வூர்வலத்தில் லயன்ஸ் கழக உறுப்பினர்கள், தரிசனம் மாணவர்கள், உதயம் விழிப்புலனற்றோர் சங்க உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சிவானந்த தேசிய பாடசாலையின் இசைக்குழுவினரும் கலந்துகொண்டு ஊர்வலத்திற்கு மேலும் சிறப்புச் சேர்த்தனர்.
இந்நிகழ்வில், சர்வதேச லயன்ஸ் கழகத்தின் 306 D 10 மாவட்ட ஆளுநர் லயன் சகீர் அஹமட் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்தார். மாவட்டத்தின் முன்னாள் ஆளுநர் லயன் கே. லோகேந்திரன், முதலாவது ஆளுநர் லயன் ரி. ஆதித்தன் மற்றும் முதன்மைத் திட்ட இணைப்பாளர் லயன் பி. சடாட்சரராஜா ஆகியோர் சிறப்பு அதிதிகளாகக் கலந்துகொண்டனர்.
உதயம் விழிப்புலனற்றோர் சங்கத் தலைவர் ப.சுபராஜ் தலைமையில் நிகழ்வுகள் யாவும் முன்னெடுக்கப்பட்டது .
ஊர்வலத்தின் நிறைவாக, கல்லடி உப்போடை துளசி மண்டபத்தில் வரவேற்பு நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிக ள் அரங்கேறின .
இதன்போது, தேசியக் கடினப்பந்து கிரிக்கெட் அணிக்குத் தெரிவாகியுள்ள தரிசனம் மாணவர்களான யூ.ஏ. விங்ஸ்லி, எம். மோகன்ராஜ் மற்றும் வை. யோகராஜா ஆகியோர் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டனர்.
அத்துடன், இளம் வீரர்களின் விளையாட்டுத் திறமையை ஊக்குவிக்கும் நோக்கில், மட்டக்களப்பு லயன்ஸ் கழகம் மாவட்டம் 306 D 10 சார்பில் கடினப்பந்து கிரிக்கெட் விளையாட்டு உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
விழிப்புலனற்றோரின் சமூகப் பங்கேற்பு, சுயமரியாதை மற்றும் சுதந்திரமான வாழ்வுக்கான விழிப்புணர்வை வலியுறுத்துவதுடன், திறமையான மாணவர்களை அடையாளம் கண்டு ஊக்குவிக்கும் இத்தகைய முயற்சிகளும் சமூகத்தில் முக்கியத்துவம் பெறுகின்றன.
மனிதநேய சேவையையும் சமூக அக்கறையையும் விளையாட்டு ஊக்குவிப்பையும் ஒருங்கிணைத்த மட்டக்களப்பு லயன்ஸ் கழகம் மாவட்டம் 306 D 10 மற்றும் உதயம் விழிப்புலனற்றோர் சங்கத்தின் இம்முயற்சி பாராட்டுக்குரியதாகும்.








































































