ஜனாதிபதி நிதியத்தின் மூலம் பல்கலைக்கழக மாணவர்களுக்காக இலவசமாக மூக்குக் கண்ணாடிகளை வழங்கும் திட்டத்தின் இரண்டாம் கட்டம் சனிக்கிழமை (10) ருஹுணு பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.
இதற்கமைய, 1,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளின் கண்கள் பரிசோதிக்கப்பட்டு, கண்ணாடிச் சட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் செவிப்புலன் பரிசோதனைகளும் இதன்போது நடத்தப்பட்டன.
இப்பரிசோதனைகளின் பின்னர், உரிய மாணவர்களுக்கு ஒரு மாதத்துக்குள் இலவசமாக மூக்குக் கண்ணாடிகள் வழங்கப்படவுள்ளன.
இத்திட்டத்துக்கு Stroud Rotary Club மற்றும் Wish மன்றம் ஆகியவை அனுசரணை வழங்குகின்றன. இதன் முதற்கட்டம் அண்மையில் ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் நடைபெற்றதோடு, அதில் 600 மாணவ, மாணவிகள் பயனடைந்தனர்.
இங்கு உரையாற்றிய ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளரும் ஜனாதிபதி நிதியத்தின் செயலாளருமான ரோஷன் கமகே, ஜனாதிபதி நிதியத்தின் தலைவரான ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ், எதிர்காலத்தில் இத்திட்டத்தை அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குறிப்பிட்டார்.
ருஹுணு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் பி.ஏ. ஜயந்த கருத்துத் தெரிவிக்கையில்,
பல்கலைக்கழக மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு நல்ல உடல் ஆரோக்கியத்தைப் பேணுவது மிகவும் முக்கியமானது எனச் சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக, ஆரோக்கியமான இரு கண்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயற்படுத்தப்படும் இத்திட்டம், மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளை இலகுவாக்கி அவர்களின் எதிர்காலத்தைப் பலப்படுத்துவதற்குப் பங்களிக்கும் ஒரு நடைமுறைத் திட்டமாகும் என்றும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் ருஹுணு பல்கலைக்கழகத்தின் பதிவாளர் மஞ்சுளா யாபா, மாணவர் அலுவல்கள் பிரிவின் உதவிப் பதிவாளர் தனுஜா தமயந்தி உட்பட பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் மன்றத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.





