சவுதி அரேபியாவின் உச்ச நீதிமன்றத்தால் இலங்கைப் பிரஜை அனோஜன் சிவராசாவின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டமைக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது மனமார்ந்த நன்றிகளையும் வரவேற்பையும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், சவுதி அரேபிய அரசாங்கத்தின் இந்த மனிதாபிமான மற்றும் நீதியான முடிவுக்குத் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டதுடன், சவுதி மற்றும் இலங்கை இராஜதந்திரிகள், அரசு அதிகாரிகள் மற்றும் சட்ட வல்லுநர்களின் கூட்டு முயற்சிகளைப் பாராட்டியுள்ளார். மேலும், "வாழ்வாதாரத்தைத் தேடி நமது கரையைக் கடந்து செல்லும் எந்தவொரு இலங்கையரும் தாம் தனித்துவிட்டதாக ஒருபோதும் உணரக்கூடாது" எனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி, வெளிநாடுகளில் வசிக்கும் அனைத்து இலங்கையர்களுக்கும் அரசாங்கம் தொடர்ந்தும் அரணாகத் துணை நிற்கும் எனவும் உறுதியளித்துள்ளார்.





