முன்பிள்ளைப் பருவக் கல்வியில் சிறுவர்களுக்கு அதிக பாடச்சுமை கொடுக்க வேண்டாம் எனவும் வலியுறுத்தல்
முன்பள்ளி வயதுடைய சிறுவர்களுக்காகப் பாடப்பரப்பு சார்ந்த தனியார் வகுப்புகளை (டியூஷன்) நடத்துவது சட்டவிரோதமானது என முன்பிள்ளைப் பருவ சிறுவர் அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் எச்.எம். வசந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
மொனராகலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
முன்பள்ளி வயதிலுள்ள சிறுவர்களுக்கு அவர்களின் வயதுக்கும் வளர்ச்சிக்கும் பொருத்தமற்ற வகையில் பாடச்சுமையை அதிகரிக்கக் கூடாது எனச் சுட்டிக்காட்டிய அவர், ஆரம்பக் குழந்தைப் பருவத்தில் சிறுவர்களின் இயல்பான வளர்ச்சிக்கும் கற்றல் அனுபவங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
இதேவேளை, புதிதாக முன்பள்ளிகளை ஆரம்பிப்பதற்கு அனுமதிகள் வழங்கப்படமாட்டாது எனத் தெரிவித்த அவர், செவனகலை பகுதியில் இயங்கிய முன்பள்ளியொன்று மூடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
முன்பள்ளி ஆசிரியர்களுக்காக ஐந்து நாள் பயிற்சிப் பட்டறையொன்றின் மூலம் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இப்பாடத்திட்டத்தில் சிறுவர்களின் கற்றல் அனுபவங்களை விரிவுபடுத்தும் வகையில் வெளிக்களச் செயற்பாடுகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
மேலும், மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்திக் குழுக்களின் ஊடாகப் பெற்றோருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
வெளிநாடுகளில் பணிபுரியும் பெற்றோரின் பிள்ளைகளுக்கான அபிவிருத்தித் திட்டமொன்று வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சினால் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
குறிப்பாக, சேனைப் பயிர்ச்செய்கைக் காலங்களில் சில பகுதிகளில் பெற்றோர் வேலைக்குச் செல்லும்போது வீடுகளில் தனியாக இருக்கும் சிறுவர்கள் பல்வேறு ஆபத்துக்களை எதிர்கொள்ள நேரிடுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, சிறுவர்களின் பாதுகாப்பு, ஆரோக்கியமான வளர்ச்சி மற்றும் வயதுக்கேற்ற கற்றல் அனுபவங்களை உறுதிப்படுத்துவதற்கு பெற்றோர், முன்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பொறுப்புடைய அதிகாரிகள் இணைந்து செயற்பட வேண்டியதன் அவசியம் இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.





