கிழக்கு மாகாண தொழில் முனைவோருக்கு புதிய சந்தை வாய்ப்புகளை உருவாக்கி, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட “மட்டக்களப்பு சர்வதேச வர்த்தகக் கண்காட்சி – 2026” நேற்று (01.10.2026) மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலை மைதானத்தில் வெகு விமரிசையாக ஆரம்பமானது.
மட்டக்களப்பு வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தின் ஏற்பாட்டில், அதன் தலைவர் தேசபந்து முத்துக்குமார் செல்வராசா தலைமையில் தொடர்ந்து மூன்றாவது தடவையாக இக்கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நான்கு நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சி ஒக்டோபர் 04ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை இடம்பெறவுள்ளது.
கிழக்கு மாகாணத்தின் சுயதொழில் முயற்சியாளர்கள் மற்றும் தொழில் முனைவோரின் உற்பத்திப் பொருட்கள் மற்றும் சேவைகளை பரந்த சந்தைக்கு அறிமுகப்படுத்துவதுடன், நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களைப் பார்வையிட்டு கொள்வனவு செய்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துவதும் இக்கண்காட்சியின் பிரதான நோக்கங்களாகும்.
இதன் மூலம் உள்ளூர் தொழில் முயற்சியாளர்களுக்கும், வெளிமாவட்ட மற்றும் சர்வதேச சந்தைகளுக்கும் இடையில் புதிய வர்த்தகத் தொடர்புகளை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்தப்படுகின்றன.
ஆரம்ப நிகழ்வில் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சரும், மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சுனில் ஹெந்துன்னெத்தி, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் இளையதம்பி சிறிநாத் மற்றும் ஞானமுத்து சிறிநேசன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மேலும், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ், மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் மற்றும் பிரதி முதல்வர், மட்டக்களப்பு வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளன உறுப்பினர்கள், தொழிலதிபர்கள், தொழில் முனைவோர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.
அத்துடன், கண்காட்சியை பார்வையிடுவதற்காக பெருமளவான பொதுமக்களும் வருகை தந்திருந்தனர்.
கிழக்கின் தொழில் முனைவோரின் உற்பத்திகளுக்கு புதிய சந்தைகளைத் திறந்து விடும் முக்கிய வர்த்தகத் தளமாக மட்டக்களப்பு சர்வதேச வர்த்தகக் கண்காட்சி – 2026 அமைந்துள்ளது.









