மட்டு - துஷாரா கலாசாரத் திணைக்களத்தின் அனுசரணையில், ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தினால் முன்னெடுக்கப்படும் ‘வத்ஸர பியவர’ வேலைத்திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட கவியரங்கு (11) ஆலையடிவேம்பு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. ஆலையடிவேம்பு பிரதேச செயலாளரும் கலாசார அதிகார சபையின் தலைவருமான ஆர்.திரவியராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வு, ஆலையடிவேம்பு பிரதேச கலாசார அதிகார சபையின் உப தலைவரும் அம்பாறை மாவட்ட கலாசார அதிகார சபையின் செயலாளருமான வா.குணாளனின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்றது. ‘வத்ஸர பியவர’ வேலைத்திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கவியரங்கின் முக்கிய நோக்கம், பாரம்பரியக் கலை மற்றும் கலாசார விழுமியங்களைப் பாதுகாத்து அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்ப்பதுடன், கவிதைத் துறையில் ஈடுபட்டுள்ள கலைஞர்களின் படைப்பாற்றல் மற்றும் கவித்துவத் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பை ஏற்படுத்துவதாகும். மேலும், கவிதைகள் ஊடாக சமூக மற்றும் பண்பாட்டு விழுமியங்களை வெளிக்கொணர்வதுடன், உள்ளூர் கவிஞர்களை ஊக்குவித்து பிரதேசத்தின் கலை, இலக்கியச் செயற்பாடுகளை மேம்படுத்துவதையும் இந்நிகழ்வு நோக்கமாகக் கொண்டிருந்தது. இதன்போது கவிஞர்கள் தமது கவிதைகளை அரங்கேற்றினர். நிகழ்வில் கலந்துகொண்ட கவிஞர்களுக்கு அதிதிகளால் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச சபையின் தவிசாளர் ஆரியதாச தர்மதாச, அம்பாறை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ரி. எம்.ரின்ஷான், ஆலையடிவேம்பு பிரதேச கலாசார அதிகார சபை உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

.jpeg)




