மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சுகாதார சேவைகளை மேம்படுத்துவதற்குப் பங்களிப்பு வழங்கிய நன்கொடையாளர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு, வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆர். முரளீஸ்வரன் தலைமையில் நேற்று (12) வைத்தியசாலையின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் மாவட்ட சுகாதார ஒருங்கிணைப்பாளருமான கந்தசாமி பிரபு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
வைத்தியசாலையின் மருத்துவ மற்றும் சுகாதார சேவைகளைச் சிறப்பாக முன்னெடுப்பதற்குத் தாராளமாகப் பங்களிப்பு வழங்கிய நன்கொடையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டதுடன், அவர்களின் சேவையைப் பாராட்டி நினைவுச் சின்னங்களும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.
இதன்போது உரையாற்றிய வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆர். முரளீஸ்வரன், உலகின் பல நாடுகளில் உயர்தர மருத்துவ சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்குப் பணம் செலுத்த வேண்டிய நிலை காணப்படுவதாகவும், இலங்கையில் மக்களுக்கு இத்தகைய மருத்துவ சேவைகளை இலவசமாக வழங்க முடிவது பெருமைக்குரிய விடயம் என்றும் தெரிவித்தார்.
மேலும், திறமையும் அர்ப்பணிப்பும் மிக்க உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை தொடர்ச்சியாகச் சிறப்பான சுகாதார சேவைகளை வழங்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர், மட்டக்களப்பு மாவட்டத்தின் சுகாதாரத் துறையை மேலும் மேம்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனத் தெரிவித்தார். எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக இதற்கான நிதி ஒதுக்கீடுகளைப் பெற்றுக்கொள்ள முயற்சிப்பதுடன், போதனா வைத்தியசாலையின் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் ஆளணிப் பற்றாக்குறைகளை விரைவாக நிவர்த்தி செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்தார்.
இந்நிகழ்வில் மருத்துவ நிபுணர்கள், வைத்தியர்கள், தாதியர்கள், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.






























































