
மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் நாட்களில் அதிக மழைவீழ்ச்சி காரணமாக வெள்ள அனர்த்தம் ஏற்படக்கூடிய சாத்தியங்கள் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ள நிலையில், அனர்த்தம் ஏற்படுவதற்கு முன்னரே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் திட்டமிட்டு முன்னெடுக்கும் வகையில் மண்முனை பிரதேச சபைத் தவிசாளர் செந்தில் குமார் தலைமையில் விசேட அனர்த்த முகாமைத்துவ அமர்வு வெள்ளிக்கிழமை (16) மண்முனை பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது.
அனர்த்தம் ஏற்பட்ட பின்னர் நடவடிக்கைகளை முன்னெடுப்பதை விட, முன்கூட்டியே தயார்நிலையில் இருப்பதன் அவசியத்தை உணர்ந்து, சபையின் அனைத்து உறுப்பினர்களையும் உள்ளடக்கி இந்த விசேட அமர்வு ஏற்பாடு செய்யப்பட்டமை தவிசாளர் செந்தில் குமாரின் முன்னெச்சரிக்கை அணுகுமுறையை வெளிப்படுத்தும் நடவடிக்கையாக அமைந்துள்ளது.
இதன்போது, மண்முனை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வெள்ளநீர் வடிந்தோடும் வழிகளைத் துப்புரவு செய்தல், வெள்ள அனர்த்தம் ஏற்படும் பட்சத்தில் மக்களைப் பாதுகாத்தல், பாதிக்கப்படும் மக்களுக்கு உடனடி உதவிகளை வழங்குதல் மற்றும் தேவையான அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகளை முன்னெடுத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
குறிப்பாக, ஆரையம்பதி, பாலமுனை, காங்கேயனோடை, கிரான்குளம், தாழங்குடா மற்றும் புதுக்குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள அனர்த்தம் ஏற்படும் பட்சத்தில், பாதிக்கப்படும் மக்களுக்கு அவசர உதவிகளை வழங்குவதற்கும் தேவையான ஒத்துழைப்புகளை வழங்குவதற்கும் மண்முனை பிரதேச சபையின் அனர்த்த முகாமைத்துவக் குழுவைத் தயார்நிலையில் வைத்திருப்பதற்கான ஏற்பாடுகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.
மக்களின் உயிர் மற்றும் உடைமைகளைப் பாதுகாப்பதுடன், அனர்த்தங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைப்பதற்கும் உள்ளூராட்சி மன்றத்தின் பொறுப்புகளை முன்கூட்டியே திட்டமிட்டுச் செயற்படுத்துவதற்கும் தவிசாளர் செந்தில் குமார் எடுத்துள்ள இந்த முன்னெடுப்பு, மக்கள் நலனை மையமாகக் கொண்ட முன்மாதிரியான செயற்பாடாகக் கருதப்படுகிறது.
வெள்ள அனர்த்தம் ஏற்படும் வரை காத்திருக்காமல், சபையின் அனைத்து உறுப்பினர்களையும் ஒருங்கிணைத்து முன்னாயத்த நடவடிக்கைகளைத் திட்டமிட்டுள்ளமை, அவசரகாலச் சூழ்நிலைகளில் ஒருங்கிணைந்த செயற்பாட்டின் முக்கியத்துவத்தையும் எடுத்துக்காட்டுகிறது.
எனவே, எதிர்வரும் நாட்களில் அதிக மழைவீழ்ச்சி காரணமாக வெள்ள அனர்த்தம் ஏற்படும் சாத்தியங்கள் காணப்படுவதால், பொதுமக்கள் உத்தியோகபூர்வ வானிலை அறிவிப்புகள் மற்றும் அனர்த்த எச்சரிக்கைகளைப் பின்பற்றி அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.




