தாவரங்கள் மனிதர்களின் வாழ்வாதாரத்துக்கு மட்டுமன்றி, அவர்களின் பண்பாடு, வழிபாடு, வரலாறு மற்றும் ஊர் அடையாளங்களுடனும் நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளன. எனினும், அபிவிருத்தி நடவடிக்கைகளால் பல தாவரங்கள் அழிந்துவருவதால், அவற்றின் பெயர்களைத் தாங்கிய ஊர்களில் இன்று பெயர்கள் மட்டுமே எஞ்சியிருக்கும் நிலை உருவாகியுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் நாவற்குடா, ஆலையடி, மாங்காடு, மாங்கேணி, காயாங்கேணி, கறுவாக்கேணி, மாஞ்சோலை, தாளங்குடா, வேப்பவெட்டுவான், புல்லுமலை, , அரசடி, முருங்கையடி போன்ற இடப்பெயர்கள் தாவரங்களுக்கும் மக்களின் வாழ்விடங்களுக்கும் இடையிலான நெருங்கிய உறவை வெளிப்படுத்துகின்றன.
குறிப்பிட்ட பகுதிகளில் அதிகமாகக் காணப்பட்ட தாவரங்கள், அவற்றின் இயற்கைச் சூழல் மற்றும் மக்களின் வாழ்வாதாரத்துடன் கொண்டிருந்த தொடர்பின் அடிப்படையில் பல ஊர்களுக்குப் பெயர்கள் உருவாகியுள்ளன. இவற்றில் சில தாவரங்கள் வழிபாட்டு மரபுகள் மற்றும் பல்வேறு சடங்குகளுடனும் தொடர்புபட்டுள்ளன.
பண்டைய காலங்களில், இனக்குழு மக்கள் தாவரங்கள், பறவைகள், விலங்குகள் மற்றும் இயற்கைப் பொருட்களைத் தமது மூதாதையர்களின் அடையாளங்களாகக் கருதி வழிபட்டுள்ளனர். அவை குறிப்பிட்ட குழுக்களின் பாதுகாப்பு மற்றும் வழிநடத்தலுடன் தொடர்புபடுத்தப்பட்டதுடன், அந்தக் குழுக்களின் அடையாளச் சின்னங்களாகவும் விளங்கியுள்ளன.
பெயர்கள் எஞ்சியுள்ளன; தாவரங்கள் எங்கே?
மட்டக்களப்பில் உள்ள அரசடி என்ற இடப்பெயர் அரச மரத்துடன் தொடர்புடையது. ஆனால், அங்கு தற்போது அரச மரம் இல்லை எனக் குறிப்பிடப்படுகிறது. அதேபோன்று, நாவல் மரங்கள் அதிகமாகக் காணப்பட்டதன் காரணமாகப் பெயர் பெற்ற நாவற்குடாவிலும் தற்போது நாவல் மரங்கள் இல்லை. வாகையமடி என அழைக்கப்படும் இடத்திலிருந்த வாகை மரமும் இன்று காணப்படவில்லை.
இவ்வாறாக, ஒரு காலத்தில் மக்களின் வாழ்விடங்களையும் இயற்கைச் சூழலையும் அடையாளப்படுத்திய தாவரங்கள், காலப்போக்கில் மறைந்து வருகின்றன. வீடுகள் அமைத்தல், வீதிகளை விரிவாக்குதல் உள்ளிட்ட உள்ளக மற்றும் வெளியக அபிவிருத்தி நடவடிக்கைகளும் பல தாவரங்கள் சூழலிலிருந்து அகற்றப்படுவதற்குக் காரணமாகியுள்ளன.
இதன் விளைவாக, எமது ஊர்களின் இயற்கை அடையாளங்களாக விளங்கிய தாவரங்கள் இன்று பல இடங்களில் கதைகளாகவும் நினைவுகளாகவும் மட்டுமே எஞ்சியுள்ளன.
எனவே, ஊர்ப்பெயர்களில் பொதிந்துள்ள வரலாற்றையும் பண்பாட்டையும் புரிந்துகொள்வதுடன், அவற்றின் பின்னணியில் உள்ள இயற்கை வளங்களைப் பாதுகாப்பதன் அவசியத்தையும் உணர வேண்டும். தாவரங்களைப் பாதுகாப்பது என்பது இயற்கையைப் பாதுகாப்பது மட்டுமல்ல; எமது ஊர்களின் வரலாற்று மற்றும் பண்பாட்டு அடையாளங்களையும் பாதுகாப்பதாகும்.
— கலாவதி கலைமகள்





