இலங்கையில் பணவீக்கம் 8 வீதத்தைக் கடந்துள்ள நிலையில், வாழ்க்கைச் செலவு தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், நாட்டின் சுமார் 75 வீதமான குடும்பங்களுக்கு தமது அன்றாடச் செலவுகளைச் சமாளிக்கப் போதிய வருமானம் இல்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலக வங்கியின் ஆய்வொன்றின்படி, 2019 முதல் 2023 வரையான காலப்பகுதியில் உண்மையான தொழிலாளர் வருமானம் 40 வீதத்துக்கும் அதிகமாக வீழ்ச்சியடைந்துள்ளது. எனினும், இதுவரை அந்த நிலை முழுமையாக மீட்கப்படவில்லை.
பெண்களின் தொழிலாளர் பங்கேற்பு வீதமும் 2019ஆம் ஆண்டில் 34.5 வீதமாகக் காணப்பட்ட நிலையில், 2024ஆம் ஆண்டில் 32.4 வீதமாகக் குறைந்துள்ளது. இது பிராந்தியத்தில் குறைந்த மட்டங்களில் ஒன்றாகத் தொடர்கிறது.
“2026ஆம் ஆண்டிலும் இலங்கையர்களில் ஐந்தில் இருவர், அதாவது 40 வீதமானோர் வறுமையில் வாழ்கின்றனர் அல்லது வறுமைக்குள் தள்ளப்படும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளனர்” என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் புள்ளிவிபரங்கள் நடுத்தர வர்க்கத்தின் வீழ்ச்சியையும் வறுமை அதிகரிப்பையும் வெளிப்படுத்துவதுடன், குடும்பங்களின் நிதிநிலை தொடர்ந்து அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதையும் சுட்டிக்காட்டுகின்றன.
குடும்பங்கள் உணவின் அளவைக் குறைத்தல், குழந்தைகளின் போஷாக்கு மட்டம் வீழ்ச்சியடைதல் மற்றும் தொழிலாளர்கள் தொழில் சந்தையிலிருந்து முழுமையாக வெளியேறுதல் ஆகியவற்றை இவை பிரதிபலிக்கின்றன. நெருக்கடி உண்மையானது; அது மிகவும் ஆழமானது. அதன் தாக்கத்தை மக்கள் இன்னமும் அனுபவித்து வருகின்றனர்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல் மாகாணத்துடன் ஒப்பிடுகையில், ஏனைய மாகாணங்களில் வறுமை வீதம் இரண்டு முதல் மூன்று மடங்கு அதிகமாகக் காணப்படுகிறது. அதேவேளை, பெருந்தோட்டத் துறையில் வறுமை வீதம் தேசிய சராசரியைவிட மூன்று மடங்கு அதிகமாக உள்ளது.
வறிய குடும்பங்களிடம் உள்ள வளங்களுக்கும் அவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குத் தேவையான வளங்களுக்கும் இடையிலான சராசரிப் பற்றாக்குறை, 2019 முதல் 2024 வரையான காலப்பகுதியில் தேசிய ரீதியில் இரட்டிப்பாகியுள்ளது.
குறிப்பாக, வட மாகாணத்தில் இந்தப் பற்றாக்குறை மேல் மாகாணத்தைவிட ஐந்து மடங்கு அதிகரித்துள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், நுகர்வு வரிகள் குடும்பங்கள் மீதான பொருளாதாரச் சுமையை மேலும் அதிகரிப்பதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த வரிகள் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 12 வீதமாக உள்ளன.
இதன் பொருள், தனிநபர்களும் நிறுவனங்களும் செலுத்தும் வருமான வரிகளுக்கு மேலதிகமாக, பொருளாதாரத்தில் உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு 100 ரூபாய் பெறுமதியான பொருட்கள் மற்றும் சேவைகளிலிருந்தும் அரசாங்கம் சராசரியாக 12 ரூபாயை நுகர்வு வரிகளாகப் பெற்றுக்கொள்கிறது என்பதாகும்.
இந்த வரிகள் பொருட்கள் மற்றும் சேவைகளின் செலவுகளை அதிகரிப்பதுடன், நுகர்வோர் கேள்வியைக் குறைத்து, விலைகள் மீது மேலதிக அழுத்தத்தை ஏற்படுத்துவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையின் மறைமுக வரிச்சுமை உலகின் உயர்ந்த மட்டங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. நீண்டகாலமாக அதிக மறைமுக வரிகளைப் பேணுவது, பொருளாதாரச் சுருக்கத்துடன் பணவீக்கமும் அதிகமாகக் காணப்படும் நிலையை உருவாக்கக்கூடும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன், இத்தகைய வரிக் கொள்கைகள் நாட்டின் ஏற்றுமதிப் போட்டித்தன்மையை மேலும் பலவீனப்படுத்தக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





