editor
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நோயாளிகள், பொதுமக்கள் மற்றும் வைத்தியசாலை உத்தியோகத்தர்களின் பயன்பாட்டிற்காக சுமார் 6 இலட்சம் ரூபாய் பெறுமதியான மூன்று நவீன குடிநீர் சுத்திகரிப்பு உபகரணங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன.
வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் ஆர். முரளீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், டாக்டர் ஏ.சி.எம். முகம்மது அவர்களினால் இந்த உபகரணங்கள் மனமுவந்து நன்கொடையாக வழங்கப்பட்டன.
சுடுநீர், குளிர்நீர் மற்றும் சாதாரண குடிநீர் ஆகியவற்றை வழங்கக்கூடிய இந்த Water Purifier உபகரணங்கள், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு (OPD), Medical Clinic மற்றும் காது, மூக்கு, தொண்டைப் பிரிவு (ENT) ஆகிய மூன்று பிரிவுகளிலும் நிறுவப்பட்டுள்ளன.
இதன் மூலம் குறித்த பிரிவுகளுக்கு சிகிச்சை மற்றும் மருத்துவ சேவைகளைப் பெற வருகை தரும் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள், சுத்தமான குடிநீர், சுடுநீர் மற்றும் குளிர்நீர் ஆகியவற்றை எவ்வித சிரமமும் இன்றி உடனடியாகப் பெற்றுக்கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நன்கொடையை வைத்தியசாலைக்கு பெற்றுக்கொடுப்பதற்கான ஒருங்கிணைப்புப் பணிகளை அபெக்ஷா நிறுவனத்தின் சார்பில் திரு. குமாரய்யா மேற்கொண்டிருந்தார். வைத்தியசாலையின் தேவைகளை கருத்திற்கொண்டு தொடர்ச்சியாக பல்வேறு உதவிகளை வழங்கி வரும் அபெக்ஷா நிறுவனத்திற்கும், இதனை ஒருங்கிணைத்த திரு. குமாரய்யாவிற்கும் வைத்தியசாலை நிர்வாகம் தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, வைத்தியசாலையின் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவிற்கு ஏற்கனவே பல்வேறு உதவிகள் மற்றும் நன்கொடைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ஏனைய முக்கிய பிரிவுகளின் தேவைகளையும் கருத்திற்கொண்டு ஒரே நேரத்தில் மூன்று குடிநீர் உபகரணங்கள் வழங்கப்பட்டமை நோயாளிகளுக்கும் வைத்தியசாலை ஊழியர்களுக்கும் பெரும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.
இந்த நன்கொடை ஒருங்கிணைப்புப் பணிகளில் வைத்தியசாலையின் தாதி உத்தியோகத்தர்களும் தமது பங்களிப்பை வழங்கியிருந்தனர். குறிப்பாக தேவா, புற்றுநோய் சிகிச்சைப் பிரிவில் பணியாற்றி வரும் நிலையில், வைத்தியசாலையின் ஏனைய பிரிவுகளுக்கான நன்கொடைகளை ஒருங்கிணைப்பதிலும் முக்கிய பங்காற்றியிருந்தார்.
பொதுமக்கள் மற்றும் நோயாளிகளின் நலனைக் கருத்திற்கொண்டு அபெக்ஷா நிறுவனம் தொடர்ந்து வழங்கி வரும் இத்தகைய சமூகநலப் பணிகள் பாராட்டுக்குரியவை எனத் தெரிவித்த வைத்தியசாலை நிர்வாகம், எதிர்காலத்திலும் இவ்வாறான உதவிகள் தொடர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அத்தியாவசிய தேவைகளுக்கு தொடர்ச்சியாக ஆதரவளித்து வரும் அனைவருக்கும் வைத்தியசாலை நிர்வாகம் தனது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துள்ளது.


































