மண்முனை வடக்கு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் வைத்தியர் சிறிநாத் உள்ளிட்டோர் முக்கிய அபிவிருத்தி விடயங்கள் குறித்து வலியுறுத்தல்
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் விஸ்தரிப்புக்காக அருகிலுள்ள சிறைச்சாலையை வேறு இடத்திற்கு மாற்றுதல், அதற்கான நிதியை 2027ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்குதல் உள்ளிட்ட முக்கிய அபிவிருத்தி விடயங்கள் தொடர்பில் மண்முனை வடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.
மண்முனை வடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், அதன் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கந்தசாமி பிரபு தலைமையில் மண்முனை வடக்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கலந்துகொண்ட மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இளையதம்பி சிறிநாத், பிரதேசத்தின் பல்வேறு உட்கட்டமைப்பு மற்றும் அபிவிருத்தித் தேவைகள் தொடர்பில் கோரிக்கைகளை முன்வைத்தார்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிலவும் இடப்பற்றாக்குறையைத் தீர்ப்பதற்காக, அதற்கு அருகிலுள்ள சிறைச்சாலையை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கான காணி ஒதுக்கீடு மற்றும் அதற்கான நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சிறிநாத் வினவினார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் தொடர்ச்சியாகப் பல்வேறு மட்டங்களில் வலியுறுத்தி வந்துள்ளார்.
கடந்த 14.01.2026 அன்று நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், சிறைச்சாலையை வேறு இடத்திற்கு மாற்றுவது தொடர்பான தீர்மானத்தை நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுக்கு அனுப்புவதற்கான பரிந்துரையை அவர் முன்வைத்திருந்தார்.
அத்துடன், 21.01.2026 அன்று சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவுடன் பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதும், வைத்தியசாலையின் விஸ்தரிப்பைக் கருத்திற்கொண்டு சிறைச்சாலையை இடமாற்றுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்தியிருந்தார்.
மேலும், 20.05.2026 அன்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நடைபெற்ற மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், வைத்தியசாலை விஸ்தரிப்புக்காக சிறைச்சாலையை மாற்றுவதுடன், மக்களின் எதிர்ப்பைக் கருத்திற்கொண்டு மாந்தீவு பகுதியில் சிறைச்சாலை அல்லது புனர்வாழ்வு நிலையம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதன் தொடர்ச்சியாக, 29.09.2026 அன்று நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், சிறைச்சாலையைப் புதிய காணிக்கு மாற்றுவதற்கான நிதி ஒதுக்கீட்டை 2027ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்குவது தொடர்பில் தீர்மானிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக, வின்சன்ட் தேசியப் பாடசாலைக்கு முன்னால் உள்ள நடைபாதை மற்றும் வளைவு சந்தியைப் புனரமைத்தல், மாந்தீவு பகுதியில் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்தல், மட்டக்களப்பு மாநகர சபை மற்றும் காத்தான்குடி நகர சபை எல்லை தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல் ஆகிய விடயங்களும் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டன.
இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞானமுத்து சிறிநேசன், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி சிவபிரியா வில்வரெட்ணம் ,ஹபீப் இர்பான், மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவம் பாக்கியநாதன், மாநகர சபை பிரதி முதல்வர், மாநகர சபை ஆணையாளர், பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி உள்ளிட்ட அரச உயர் அதிகாரிகள், நிறுவனப் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தமது கருத்துக்களை முன்வைத்தனர்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் விஸ்தரிப்பு உள்ளிட்ட இவ்வபிவிருத்தி விடயங்கள் நடைமுறைப்படுத்தப்படும் பட்சத்தில், பிரதேச மக்களின் சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும்.





