இலங்கையில் இன்சுலின் உற்பத்தி 2027இல் ஆரம்பம்! – ரூ. 3 பில்லியனுக்கும் அதிகமான முதலீட்டில் புதிய தொழிற்சாலை

 



இலங்கையின் முதலாவது இன்சுலின் உற்பத்தித் தொழிற்சாலையில் 2027ஆம் ஆண்டு உற்பத்திப் பணிகளை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலி, கொக்கலை ஏற்றுமதி செயலாக்க வலயத்தில் அமைந்துள்ள இத்தொழிற்சாலையின் கட்டுமானப் பணிகள் 3 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான முதலீட்டில் நிறைவடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

சுகாதார அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ அண்மையில் தொழிற்சாலைக்கான கண்காணிப்பு விஜயத்தில் பங்கேற்றுள்ளார்.

இன்சுலின் உற்பத்தியுடன் மட்டுப்படுத்தப்படாமல், மயக்க மருந்துகள் மற்றும் வலி நிவாரணிகள் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துகளையும் இத்தொழிற்சாலையில் உற்பத்தி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் உற்பத்தியை 33 வகையான மருந்துகள் வரை விரிவுபடுத்துவதும் இலக்காகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஹொரணையில் மருந்து உற்பத்தித் தொழிற்சாலையொன்றை நிறுவுவதற்காக Zydus Sunshine Life Sciences நிறுவனம் இலங்கை முதலீட்டுச் சபையுடன் 20 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான முதலீட்டுக்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டங்கள் நடைமுறைக்கு வரும்போது, உள்நாட்டிலேயே மருந்துகளை உற்பத்தி செய்யும் இலங்கையின் ஆற்றல் விரிவடைவதுடன், இறக்குமதியில் தங்கியிருக்கும் நிலையை குறைப்பதற்கும் புதிய வாய்ப்புகள் உருவாகலாம்.