ஆசிய பரா விளையாட்டு 2026: 200 மீற்றர் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார் ஜனனி தனஞ்சனா!

 


அய்ச்சி - நகோயா 2026 ஆசிய பரா விளையாட்டு விழாவில் ரி47 வகைப்பிரிவு  பெண்களுக்கான  200 மீற்றர் இறுதி ஓட்டப் போட்டியில் பங்குபற்ற இலங்கையின் மாற்றுத்திறனாளியும் 2023 ஆசிய பரா விளையாட்டு விழாவில் பதக்கம் வென்றவருமான ஜனனி தனஞ்சனா விக்ரமசிங்க தகுதி பெற்றுள்ளார்.

இதற்கு முன்னோடியாக நகோயா சிட்டி மிஸுஹோ பார்க் மெய்வல்லுநர் விளையாட்டரங்கில் திங்கட்கிழமை (19) நடைபெற்ற 2ஆவது தகுதிகாண் சுற்று 200 மீற்றர் ஓட்டப் போட்டியை 26.19 செக்கன்களில் ஓடி முடித்து   தனஞ்சனா   இரண்டாம் இடத்தைப் பெற்றதன் மூலம் இறுதிப் போட்டியில் பங்குபற்ற  தகுதிபெற்றார்.

இந் நிகழ்ச்சிக்காக நடத்தப்பட்ட இரண்டு தகுதிகாண் சுற்றுகள் முடிவில் தனஞ்சனா ஒட்டுமொத்த நிலையில் 5ஆம் இடத்தில் உள்ளார்.

தகுதிகாண் சுற்றில் பங்குபற்றிய மற்றொரு இலங்கை மாற்றுத்திறனாளி சந்துனி ஜயசுந்தர (30.48 செக்) இறுதிப் போட்டிக்கு முன்னேறத் தவறினார்.

இன்று  செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் தனஞ்சனா அதிக பிரயாசை எடுத்துக்கொண்டு ஓடினால் பதக்கம் கிடைக்க வாய்ப்புள்ளது.