உன்னிச்சை மக்களின் 14 ஆண்டு குடிநீர் காத்திருப்புக்கு விடிவு – கந்தசாமி பிரபு எம்.பி.

 







மட்டக்களப்பு மாவட்டத்தின் உன்னிச்சை பிரதேச மக்களின் 14 ஆண்டுகால சுத்தமான குடிநீர் எதிர்பார்ப்புக்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக தற்போது விடிவு ஆரம்பித்துள்ளதாக மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்டகாலமாக நிலவி வரும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் உன்னிச்சை பகுதியில் புதிய குடிநீர் திட்டத்திற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

உன்னிச்சை குளத்தின் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் ஒரு இலட்சம் பயனாளர்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றது. எனினும், இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு சுமார் 14 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும், உன்னிச்சை பிரதேசத்தைச் சேர்ந்த மக்களுக்கு தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் ஊடாக முறையான குடிநீர் விநியோகம் கிடைக்கவில்லை என்ற குறை நீண்டகாலமாக நிலவி வந்தது.

இந்த நிலையில், உன்னிச்சை மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் தற்போது புதிய திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபைக்கு 833 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன், கட்டம் கட்டமாக பணிகளை முன்னெடுப்பதற்கான ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றது.

இதன் ஆரம்ப நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய கந்தசாமி பிரபு எம்.பி., உன்னிச்சை மக்களின் நீண்டகால குடிநீர் எதிர்பார்ப்பு தற்போது நிறைவேறும் கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவித்தார்.

உன்னிச்சை குடிநீர் திட்டத்தின் முதற்கட்டமாக சுமார் 1,000 பேருக்கு குடிநீர் விநியோகத்தை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதற்காக 500 கன அடி கொள்ளளவு கொண்ட நிலத்தடி நீர்த்தொட்டி (Ground Sump), பம்ப் அறை, ஜெனரேட்டர் அறை, இரசாயன அறை, பராமரிப்பாளர் இல்லம் மற்றும் மின்மாற்றி அறை (Transformer Cubicle) ஆகியவற்றை அமைப்பதற்காக முதற்கட்டமாக 137 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், உன்னிச்சையில் 1,000 கனமீற்றர் கொள்ளளவு கொண்ட நீர் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றை அமைப்பதற்காக மேலும் 35 மில்லியன் ரூபாய் நிதி முதற்கட்டமாக செலவிடப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார்.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் குடிநீரை வழங்கி வந்த உன்னிச்சை மக்களின் சொந்த குடிநீர் கனவு, 14 ஆண்டுகளுக்குப் பின்னர் நனவாகும் நிலையை எட்டியுள்ளது.

நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட இந்த குடிநீர் திட்டம் நடைமுறைக்கு வருவதன் மூலம் உன்னிச்சை பிரதேச மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு படிப்படியாக தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.