மட்டக்களப்பு வவுணதீவு மணிபுரம் கிராமத்தின் பல ஆண்டுகால குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு! 100 இற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு குடிநீர் வசதி!

 

















மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு மணிபுரம் கிராமத்தில் நீண்டகாலமாக நிலவி வந்த குடிநீர்த் தட்டுப்பாட்டுக்குத் தீர்வுகாணும் வகையில், குடிநீர் வசதியை ஏற்படுத்துவதற்கான ஆரம்பப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஏறாவூர்ப்பற்று பிரதேச சபை உறுப்பினர் செ. நிலாந்தன் தலைமையில் நடைபெற்ற இப்பணிகளின்போது, கிராம மக்களின் இறைவணக்கத்துடன் நிலத்தடி நீரைத் தேடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. இரவு முழுவதும் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின் பின்னர், வயல் பகுதியில் நீரூற்று கண்டறியப்பட்டு, நீரைப் பெற்றுக்கொள்வதற்கான குழாய்களும் பொருத்தப்பட்டன. நீண்டகாலமாகக் குடிநீரின்றிச் சிரமங்களை எதிர்கொண்டுவந்த கிராம மக்கள், நிலத்திலிருந்து நீர் பெருக்கெடுத்து வந்ததைக் கண்டு பெரும் மகிழ்ச்சியடைந்தனர். ஏறாவூர்ப்பற்று பிரதேச சபை உறுப்பினர் செ. நிலாந்தன் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் ஊடாக முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று, கொழும்பு நற்குண முன்னேற்றக் கழகம் இத்திட்டத்திற்கான நிதி உதவியை வழங்கியுள்ளது. இத்திட்டத்தின் மூலம் மணிபுரம் கிராமத்தைச் சேர்ந்த 100 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் நேரடியாகக் குடிநீர் வசதியைப் பெற்றுப் பயனடையவுள்ளன. இத்திட்டத்தை முன்னெடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன், ஏறாவூர்ப்பற்று பிரதேச சபை உறுப்பினர் செ. நிலாந்தன், புல்லுமலை வட்டாரப் பிரதேச சபை உறுப்பினர் சி. சிவானந்தன், மணிபுரம் வட்டார உறுப்பினர் அருன் ஆகியோருக்கும், நிதி உதவி வழங்கிய நற்குண முன்னேற்றக் கழகத்தின் கொழும்பு மற்றும் மட்டக்களப்பு மாவட்டத் திட்டப் பணிப்பாளர்களுக்கும், திட்டத்திற்கு அனுமதி வழங்கிய வவுணதீவு பிரதேச சபைத் தவிசாளருக்கும் கிராம மக்கள் நன்றிகளைத் தெரிவித்தனர். மேலும், இப்பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய ஏறாவூர்ப்பற்று பிரதேச சபை உறுப்பினர் அ. நிதர்சன், சமூகச் செயற்பாட்டாளர் நாராயணசாமி ஐயா, மணிபுரம் கிராம அபிவிருத்திச் சங்க நிர்வாகத்தினர் மற்றும் ஆலய நிர்வாகத்தினர் ஆகியோருக்கும் மக்கள் தமது நன்றிகளைத் தெரிவித்தனர். நீண்டகாலமாகக் குடிநீருக்காகச் சிரமங்களை எதிர்கொண்டுவந்த மணிபுரம் கிராம மக்களின் அடிப்படைத் தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கில் முன்னெடுக்கப்படும் இத்திட்டம், அப்பகுதி மக்களின் அன்றாட வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான முக்கிய முயற்சியாக அமைந்துள்ளது.