பொதுமக்களுக்கான சேவையில் புதிய அத்தியாயம் – மட்டக்களப்பு மாநகர சபையில் Token முறை ஆரம்பம் - இனி நீண்ட வரிசைக்கு முற்றுப்புள்ளி

 



பொதுமக்கள் மாநகர சபைக்கு வருகை தந்து பல்வேறு சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் போது ஏற்படும் நீண்ட நேரக் காத்திருப்பை குறைக்கும் வகையில், மட்டக்களப்பு மாநகர சபையில் புதிய Token (வரிசைச் சீட்டு) முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு சேவைகளை விரைவாகவும் முறையாகவும் வழங்கும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இந்தப் புதிய திட்டம், மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் நாகராஜா தனஞ்ஜெயன் அவர்களின் வழிகாட்டலின் கீழ் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

புதிய நடைமுறையை மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் மாநகர சபையின் பிரதி ஆணையாளர், பிரதம கணக்காளர், நிர்வாக உத்தியோகத்தர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டதுடன், சேவைகளைப் பெற்றுக்கொள்ள மாநகர சபைக்கு வருகை தந்த பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

புதிய Token முறை மூலம், ஒவ்வொரு சேவைக்கும் தனித்தனியாக நீண்ட வரிசைகளில் காத்திருக்கும் நிலை குறைக்கப்பட்டு, பொதுமக்கள் தங்களுக்கு வழங்கப்படும் வரிசை இலக்கத்தின் அடிப்படையில் தங்களது சேவையைப் பெற்றுக்கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் மாநகர சபையின் சேவை வழங்கும் நடவடிக்கைகள் மேலும் ஒழுங்குபடுத்தப்படுவதுடன், பொதுமக்களின் நேரத்தைச் சேமித்து, குறுகிய காலத்திற்குள் தேவையான சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இனி மட்டக்களப்பு மாநகர சபையில் சேவைகளைப் பெற்றுக்கொள்ள வரும் பொதுமக்கள், முதலில் முகப்பு அலுவலகத்தில் Token பெற்றுக்கொண்ட பின்னரே சம்பந்தப்பட்ட சேவைப் பிரிவுகளுக்குச் செல்ல வேண்டும் என மாநகர சபை அறிவித்துள்ளது.

பொதுமக்களுக்கு நவீன, இலகுவான மற்றும் வினைத்திறன்மிக்க நிர்வாக சேவைகளை வழங்கும் நோக்கில் மாநகர சபையினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளில் ஒன்றாக இந்தப் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.