ஏறாவூர்பற்று பிரதேச சபைக்குட்பட்ட வந்தாறுமூலை மேற்கு பகுதியில் நீண்டகாலமாகப் புனரமைப்பு தேவைப்பட்ட செட்டியார் குறுக்கு வீதியைச் செப்பனிடும் பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.
2026ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் முன்னெடுக்கப்படும் இவ்வேலைத்திட்டம், ஏறாவூர்பற்று பிரதேச சபையின் வந்தாறுமூலை வட்டார உறுப்பினர் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத் அவர்களின் பிரதான இணைப்பாளர் த.பிரபாகரன் அவர்களின் முன்மொழிவின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நேற்று (07.09.2026) இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வில் அதிதிகள் பாரம்பரிய முறைப்படி வரவேற்கப்பட்டதுடன், இறைவழிபாட்டைத் தொடர்ந்து வீதி புனரமைப்புப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும் நடைபெற்றது.
நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத், அடிக்கல்லை நாட்டி வைத்து வீதி அபிவிருத்திப் பணிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வில் ஏறாவூர்பற்று பிரதேச சபைத் தவிசாளர் மு.முரளிதரன், பிரதேச சபை உறுப்பினர்களான கா.நாகேந்திரன் மற்றும் சி.வவானந்தன், தொழில்நுட்ப உத்தியோகத்தர், அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அத்துடன், வந்தாறுமூலை மேற்கு கண்ணகி சனசமூக நிலையத் தலைவர் கி.சந்திரகுமார், கிராம மட்ட பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பிரதேச பொதுமக்களும் நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.
வீதியின் புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்த பின்னர், அப்பகுதி மக்களின் அன்றாடப் போக்குவரத்து மேலும் இலகுவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.





