மட்டக்களப்பு - பதுளை வீதியின் கொடுவாமடு பிரதான வீதிப் பகுதியில் நேற்று (09) அதிகாலை காட்டு யானை தாக்கியதில் 57 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
வந்தாறுமூலை பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான கந்தலிங்கம் மோகன் (வயது 57) என்பவரே இச்சம்பவத்தில் உயிரிழந்தவராவார்.
இன்று அதிகாலை தனது வீட்டில் இருந்து மாவடியோடை பகுதியை நோக்கி தனது கால்நடைகளைப் பார்வையிடுவதற்காக இவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோதே, கொடுவாமடு - பதுளை பிரதான வீதியில் மறைந்திருந்த காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
தாக்குதலில் பலத்த காயமடைந்த அவர் உடனடியாக செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக செங்கலடி பிரதேச வைத்தியசாலையிலிருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் கரடியனாறு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அண்மைக்காலமாக இப்பகுதியில் மனித-யானை மோதல்கள் கணிசமாக அதிகரித்து வருவதாகவும், விவசாய நிலங்கள் மற்றும் கிராமப்புறங்களை ஒட்டிய பகுதிகளில் இத்தகைய துயரச் சம்பவங்கள் தொடர்கதையாகி வருவதாகவும் கிராம மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
காட்டு யானைகளின் ஊடுருவலைத் தடுத்து, கிராம மக்களின் உயிர் மற்றும் சொத்து பாதுகாப்பை உறுதி செய்ய உடனடி மற்றும் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை வனஜீவராசிகள் திணைக்களமும் அதிகாரிகளும் மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் தீவிர கோரிக்கை விடுத்துள்ளனர்.





