சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் சிவராசா அனோஜன் என்ற இலங்கையருக்கு மன்னிப்பு பெற்றுத் தருவதற்கு அரசாங்கம் முடிந்தவரை தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகக் குறிப்பிட்ட அமைச்சர், அவருக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனையைக் குறைப்பதே அரசாங்கத்தின் முதன்மை எதிர்பார்ப்பு எனவும் தெரிவித்தார். இச்சம்பவம் குறித்துத் தகவல் கிடைத்தவுடனேயே சவூதி அரசாங்கத்துடன் பல கட்டப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதுடன், அனோஜனுக்கு சட்ட உதவிகளை வழங்குவதற்காகச் சவூதியிலுள்ள இலங்கைத் தூதரகம் நேரடியாகத் தலையிட்டுள்ளது. இதற்கென விசேட அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டு, சவூதி அரேபியச் சட்டத்திற்கு அமையத் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.





