சிறுவர் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய நடவடிக்கை – அரச சேவையாளர்களுக்கு கட்டாய சான்றிதழ்

 


அரச சேவையில் ஈடுபடுபவர்கள் குறிப்பாக சிறுவர்களுடன் நேரடியாகத் தொடர்புடைய பணிகளில் நியமிக்கப்படுபவர்கள் சிறுவர் துஷ்பிரயோகம் அல்லது சிறுவர் குற்றங்களில் ஈடுபடவில்லை என்பதை உறுதிப்படுத்தும் சான்றிதழைப் பெறுவதை கட்டாயமாக்குவது தொடர்பாக அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகாரங்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் ‘திவியட சவியக்’ வீடமைப்பு உதவித் திட்டம் குறித்து தெளிவுப்படுத்தும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

சிறுவர்களுடன் பணியாற்றும் நபர்கள் பொலிஸ் துறை அல்லது உரிய நிறுவனங்களிடமிருந்து இச்சான்றிதழைப் பெறுவது கட்டாயமாக்கப்படுவதோடு, அரச பணியிலிருப்பவர்கள் தங்களது சேவைக் காலத்தில் சம்பள உயர்வு அல்லது பதவி உயர்வுகளின் போது உரிய கால இடைவெளியில் இச்சான்றிதழைத் தொடர்ச்சியாக புதுப்பிக்க வேண்டும்.

மேலும், வளமான நாடு அழகான வாழ்வு என்ற கருப்பொருளில் வழங்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளுக்கு அமைவாக பாதுகாப்பான நாட்டை உறுதி செய்யவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சிறந்த வாழ்வைப் பெற பாதுகாப்பற்ற வீடுகளில் வாழும் நபர்கள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பு முக்கியமானது என்பதால் பாராமரிப்பு இல்லங்களிலிருந்து சமூகமயமாக்கப்படும் நாட்டு பிரஜைகள் மற்றும் மாற்றுதிறனாளிச் சிறுவர்களைக் கொண்ட குடும்பங்களுக்கு குறித்த   ‘திவியட சவியக்’ வீடமைப்பு உதவித் திட்டத்தின் கீழ முன்னுரிமை வழங்கப்படும்

அத்துடன், இதன் முதற்கட்டமாக மேல் மாகாணத்தில் ஜனாதிபதி தலைமையில் வியாழக்கிழமை (17) ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது என்றார்.