ராஜபக்ஷ அணியின் ஊழல்வாதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் போது, ரணில் மற்றும் சஜித் தரப்பினர் கலக்கமடைவதும் ஆதரவளிப்பதும் ஆச்சரியமான விடயமல்ல என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். அவர்கள் அனைவரும் நண்பர்கள் என்பதால் இவ்வாறு செயற்படுவதாக அவர் சாடியுள்ளார்.
கடந்த காலத்தில் இடம்பெற்ற 'திருடன் - பொலிஸ்' விளையாட்டு இனிமேல் நாட்டில் செல்வாக்கு செலுத்த முடியாது எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, குற்றவாளிகள் மற்றும் திருடர்களுக்கு எதிராகத் தற்போது பொலிஸார் மிகவும் கடுமையான முறையில் சட்டத்தை நடைமுறைப்படுத்தி வருவதாகத் தெரிவித்தார். மேலும், எதிர்க்கட்சியில் உள்ள கீரியும் பாம்பும் போன்ற எதிரெதிர் துருவங்கள் அனைத்தும் ஒன்றாகச் சேருவது அரசாங்கத்திற்கு எந்தவிதத்திலும் சவாலாக அமையாது என்றும், மாறாக அது அரசாங்கத்தின் பணிகளை இலகுவாக முடிப்பதற்கு மட்டுமே வழிவகுக்கும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.





