புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்த மாணவர்களுக்கும் , தேசிய மல்யுத்த சாம்பியன்களுக்கும் சிவானந்தா தேசிய பாடசாலையில் கௌரவிப்பு.

 


















































































2026ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்த மாணவர்களையும், பரீட்சையில் சித்தியடைந்த ஏனைய மாணவர்களையும் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலை ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.
பாடசாலையின் கல்விச் சிறப்புக்கு மற்றுமொரு பெருமை சேர்க்கும் வகையில், அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான மல்யுத்தப் போட்டியில் முதன்முறையாக மல்யுத்த சாம்பியன் கிண்ணத்தை வென்று சாதனை படைத்த சிவானந்தா தேசிய பாடசாலை மல்யுத்த வீரர்களும் இந்நிகழ்வில் பெருமையுடன் கௌரவிக்கப்பட்டனர்.
பாடசாலையின் பெயரை தேசிய மட்டத்தில் உயர்த்திய இந்த இளம் வீரர்களின் வெற்றிக்குப் பின்னால் அர்ப்பணிப்புடன் உழைத்த பயிற்றுவிப்பாளர் V. திருச்செல்வம் அவர்களும் சிறப்பாக கௌரவிக்கப்பட்டார். மாணவர்களின் திறமையை அடையாளம் கண்டு, கடினமான பயிற்சிகளின் ஊடாக அவர்களை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்ற அவரது பங்களிப்பு இந்நிகழ்வில் பாராட்டப்பட்டது.
பாடசாலை அதிபர் S. தயாபரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மேலதிக பணிப்பாளர் நாயகம் V. வாசுதேவன் அவர்கள் முதன்மை அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்.

முதன்மை அதிதி V. வாசுதேவன் அவர்கள், கல்வியில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கும் தேசிய மட்டத்தில் சாதனை படைத்த மல்யுத்த வீரர்களுக்கும் நினைவுக் கேடயங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தர் .
இந்நிகழ்வில் பழைய மாணவர்கள், மாணவர் சங்க   செயலாளர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பாடசாலை சமூகத்தினர் பலரும் கலந்துகொண்டு சாதனையாளர்களை பாராட்டி மகிழ்ந்தனர்.

சிவானந்தாவின் இந்தச் சாதனைப் பயணம் இன்னும் பல தேசிய வெற்றிகளையும், கல்வியிலும் விளையாட்டிலும் புதிய தலைமுறை சாதனையாளர்களையும் உருவாக்கட்டும்!