.‘அத்தம’ தேசிய தூய்மைப் பணியில் கல்லடி கடற்கரை – மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் தலைமையில் தூய்மைப்படுத்தும் நடவடிக்கை

 


























































நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் “அத்தம” தேசிய தூய்மைப்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ், மட்டக்களப்பு கல்லடி கடற்கரை தூய்மைப்படுத்தும் நடவடிக்கை, மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி சிவபிரியா வில்வரெத்தினம் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.

இலங்கையின் பாரம்பரிய கிராமிய சமூக வாழ்வில் ஆழமாக வேரூன்றிய “அத்தம” என்பது, பணத்தை அடிப்படையாகக் கொள்ளாமல் ஒருவருக்கொருவர் தங்களது உழைப்பை பரிமாறிக்கொண்டு சமூகப் பணிகளில் ஒன்றிணைந்து செயற்படும் உன்னதமான பாரம்பரியத்தை எடுத்துக்காட்டும் சமூகத் தத்துவமாகும்.

ஒருவரின் தேவைக்காக மற்றவர்கள் ஒன்றிணைந்து தங்களது உழைப்பை வழங்குவதும், பின்னர் தேவையான சந்தர்ப்பத்தில் அந்த உழைப்பை பரஸ்பரம் திருப்பிக் கொடுப்பதுமான இந்தப் பாரம்பரிய நடைமுறை, சமூக ஒற்றுமை, சமத்துவம் மற்றும் கூட்டுப் பொறுப்பு ஆகியவற்றை வலுப்படுத்தும் அடிப்படைக் கொள்கையாகக் கருதப்படுகிறது.

அந்த சமூக ஒற்றுமை மற்றும் கூட்டுப் பொறுப்புணர்வை மீண்டும் மக்கள் மத்தியில் வலுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் “அத்தம” தேசிய தூய்மைப்படுத்தும் வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாகவே கல்லடி கடற்கரை தூய்மைப்படுத்தும் நடவடிக்கை இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், இலங்கை இராணுவத்தினர், விமானப்படையினர் மற்றும் பிரதேச பொதுமக்கள், பொது சுகாதார பரிசோதகர்கள் , பிராந்திய சுகாதார சேவைகள் வைத்திய அதிகாரி உள்ளிட்ட பலரும் ஆர்வத்துடன் பங்கேற்று கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

குறிப்பாக, மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி சிவபிரியா வில்வரெத்தினம், அலுவலக மட்டத்தில் இருந்து பணிப்புரைகளை வழங்குவதுடன் மாத்திரம் நின்றுவிடாது, நேரடியாக களத்தில் இறங்கி, மக்களோடு மக்களாக இணைந்து உச்சி வெயிலையும் பொருட்படுத்தாது தூய்மைப் பணியில் ஈடுபட்டமை   குறிப்பிடத்தக்கது

தூய்மையான சுற்றுச்சூழலை உருவாக்குவதில் அரசாங்கத்தின் கொள்கைத் திட்டத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதுடன், அதனை நடைமுறைச் செயற்பாடாக மாற்றுவதில் அரச அதிகாரிகளின் தலைமைத்துவமும் அர்ப்பணிப்பும் எவ்வளவு முக்கியமானது என்பதையும் அவரது களப்பணி வெளிப்படுத்தியது.

“தூய்மையான நாடு – பொறுப்புள்ள குடிமக்கள்” என்ற நோக்கை முன்னிறுத்தி முன்னெடுக்கப்படும் “அத்தம” தேசிய தூய்மைப்படுத்தும் வேலைத்திட்டத்தின் மூலம், சுற்றுச்சூழல் தூய்மை என்பது அரச நிறுவனங்களின் பொறுப்பு மட்டுமன்றி, ஒவ்வொரு குடிமகனினதும் சமூகப் பொறுப்பு என்ற உணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் முயற்சி முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.