யானை தாக்கி இருவர் உயிரிழப்பு – கெப்பித்திகொல்லாவையில் சோகம்

 


அநுராதபுரம், கெப்பித்திகொல்லாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகலஉஷ்கொல்லாவ பகுதியில் யானை தாக்கியதில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் நேற்றையதினம் வெள்ளிக்கிழமை (04) மாலை இடம் பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர்கள் கெப்பித்திகொல்லாவ, பகலஉஸ்கொல்லாவ பகுதியைச் சேர்ந்த செனவிரத்னகே சிறிபால (70) மற்றும் சமரகோன் அப்புஹாமிலாகே சுகத் சுமணரத்ன (51) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து தெரிய வருவதாவது, தங்களது வாழ்வாதாரமாக சேனைப் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டு வரும் குறித்த இருவரும் சிறிய காட்டினை துப்புரவு செய்து கொண்டிருக்கும்போது அங்கு திடீரென வந்த யானை ஒன்று இருவரையும் தாக்கியதாகவும் இதன் காரணமாக, சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்துள்ளதாகவும் ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கெப்பித்திகொல்லாவ திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.எல். காதர் இரண்டு சடலங்களையும் பார்வையிட்ட பின்னர், பிரேத பரிசோதனைக்காக அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை கெப்பித்திகொல்லாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.