மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில், “இரத்த தானம் – உயிர் தானம்” எனும் தொனிப்பொருளில் இரத்த தான நிகழ்வு பிரதேச செயலக மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி சிவபிரியா வில்வரெத்தினம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் மற்றும் சமூக நலனில் அக்கறை கொண்ட நலன் விரும்பிகள் எனப் பலரும் ஆர்வத்துடன் கலந்துகொண்டு குருதிக்கொடை வழங்கினர்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிலவும் அவசர இரத்தத் தேவையை நிவர்த்தி செய்வதுடன், அவசர சிகிச்சைப் பிரிவுகளில் ஏற்படக்கூடிய இரத்தத் தட்டுப்பாட்டினால் நோயாளிகளின் உயிருக்கு ஏற்படக்கூடிய ஆபத்தைக் குறைத்து, அவர்களின் உயிரைக் காப்பாற்றுவதற்கு பங்களிப்பதே இந்நிகழ்வின் பிரதான நோக்கமாக அமைந்திருந்தது.
சமூகப் பொறுப்புணர்வுடன் முன்னெடுக்கப்பட்ட இத்தன்னார்வ இரத்த தானப் பணி, ஏனைய அரச திணைக்களங்களுக்கும் நிறுவனங்களுக்கும் ஒரு சிறந்த முன்மாதிரியாக அமைந்துள்ளது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பொறுப்பு வைத்தியர் டாக்டர் சஞ்சிதா தலைமையில் வருகை தந்த தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் அடங்கிய குழுவினர், குருதிக்கொடை வழங்கியவர்களிடமிருந்து இரத்தத்தை பாதுகாப்பான முறையில் சேகரிக்கும் நடவடிக்கைகளைத் திறம்பட முன்னெடுத்தனர்.
தன்னார்வத்துடன் முன்வந்து குருதிக்கொடை வழங்கிய கொடையாளர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் நிகழ்வைச் சிறப்பாக நடத்தி முடிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கிய மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மருத்துவக் குழுவினருக்கு மண்முனை வடக்கு பிரதேச செயலகம் தனது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டது.










































