பிரபல தமிழறிஞரும், பட்டிமன்ற நடுவரும், முன்னாள் பேராசிரியருமான சாலமன் பாப்பையா தனது 90ஆவது வயதில் காலமானார்.
உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர், 2026 செப்டம்பர் 11ஆம் திகதி மதுரையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுச் செய்தி தமிழ் இலக்கிய உலகிலும், பட்டிமன்ற ரசிகர்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
1936ஆம் ஆண்டு மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள சாத்தங்குடியில் பிறந்த சாலமன் பாப்பையா, மதுரை அமெரிக்கன் கல்லூரியின் தமிழ்த்துறையில் பேராசிரியராகப் பணியாற்றியதுடன், அத்துறையின் தலைவராகவும் பொறுப்பு வகித்தார்.
தமிழ் இலக்கிய அறிவையும் நகைச்சுவை கலந்த பேச்சாற்றலையும் இணைத்து, எளிய மக்களுக்கும் புரியும் வகையில் கருத்துகளை எடுத்துரைத்த அவர், பட்டிமன்றங்களை மக்கள் மத்தியில் மிகவும் பிரபலப்படுத்திய முக்கிய ஆளுமையாக திகழ்ந்தார்.
குறிப்பாக தொலைக்காட்சி பட்டிமன்றங்கள் ஊடாக பல தலைமுறை தமிழர்களின் இல்லங்களுக்குள் சென்றடைந்த சாலமன் பாப்பையாவின் தனித்துவமான நடுவர்ப் பாணியும், நகைச்சுவை கலந்த பேச்சும், ஆழமான தமிழ் இலக்கிய அறிவும் அவருக்கு தனிப்பட்ட ரசிகர் வட்டத்தை உருவாக்கியது.
தமிழ் மொழி மற்றும் இலக்கியத்திற்கான அவரது நீண்டகாலப் பங்களிப்பைப் பாராட்டி, தமிழக அரசு அவருக்கு கலைமாமணி விருதையும், இந்திய அரசு 2021ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதையும் வழங்கி கௌரவித்திருந்தது.
பட்டிமன்ற மேடைகளைக் கடந்து திரைப்படங்களிலும் நடித்துள்ள சாலமன் பாப்பையா, தமிழ் மொழியை மக்களிடம் எளிமையாகக் கொண்டு சேர்த்ததன் மூலம் தனக்கென அழியாத தடத்தைப் பதித்துள்ளார்.
அவரது மறைவு தமிழ் மொழிக்கும், இலக்கியத்துக்கும், பட்டிமன்ற உலகிற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
அவரது குரலும், கருத்துகளும், நகைச்சுவையும், தமிழ்ப்பணியும் அவர் மறைந்த பின்னரும் தலைமுறைகள் கடந்து நினைவுகூரப்படும்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும்.





