பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட சருமத்தை வெண்மையாக்கும் இரண்டு கிரீம்களில், அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகளவில் கன உலோகங்கள் இருப்பது பரிசோதனைகளில் கண்டறியப்பட்டுள்ளதாக இந்திய மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு ( Central Drugs Standard Control Organisation) தெரிவித்துள்ளது.
கடந்த 8ஆம் திகதி வெளியிடப்பட்ட பொது சுகாதார அறிவிப்பில், குறித்த இரண்டு கிரீம்களையும் இந்தியாவுக்குள் இறக்குமதி செய்வதற்குத் தேவையான பதிவுச் சான்றிதழ் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த கிரீம்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின்போது, குறிப்பிட்ட அளவைவிட அதிகமான கன உலோகங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும், அவை நச்சுத்தன்மை உள்ளிட்ட சுகாதார அபாயங்களை ஏற்படுத்தக்கூடும் எனவும் இந்திய மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு எச்சரித்துள்ளது.
எனவே, குறித்த இரண்டு கிரீம்களையும் கொள்வனவு செய்யவோ பயன்படுத்தவோ வேண்டாம் என இந்திய மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், இந்தப் பொருட்களின் விற்பனை, விநியோகம் மற்றும் விளம்பரப்படுத்தலைத் தடுக்குமாறு இந்தியாவின் மாநில மற்றும் ஒன்றியப் பிரதேச மருந்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த கிரீம்களில் உள்ளடங்கியுள்ள இரசாயனங்கள் மனித உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, இந்த கிரீம்களைப் பயன்படுத்தியவர்கள் உடல்நலக் குறைபாடுகள் அல்லது தொடர்ச்சியான தோல் பிரச்சினைகளை எதிர்கொண்டால், மருத்துவ ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
மேலும், இறக்குமதி செய்யப்படும் அழகு சாதனப் பொருட்களை கொள்வனவு செய்யும்போது, உற்பத்தியாளர் விபரங்கள், உற்பத்தி மற்றும் காலாவதி திகதிகள், தொகுதி இலக்கம் மற்றும் தேவையான இறக்குமதி பதிவு விபரங்கள் உள்ளிட்டவற்றைச் சரிபார்க்குமாறும் நுகர்வோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.





