இலவச சுகாதாரத் துறையை மேலும் மக்களிடம் நெருக்கமாக்குதல், உலகின் அதிநவீன உபகரணங்கள் மற்றும் மருத்துவ முறைகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் முறையான முகாமைத்துவ முறைமையை ஸ்தாபித்தல் என்பவையே அந்த முக்கியப் பிரிவுகள் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, குறிப்பிடத்தக்க காலப்பகுதிக்குப் பின்னர் நாட்டின் சுகாதார சேவையைப் பலமாகப் பேணிச் செல்வதற்குத் தேவையான மனிதவளம் மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் நவீன இருதய சிகிச்சை தொகுதியின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் புதன்கிழமை (16) பிற்பகல் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகாமைத்துவ நிறுவனத்தின் (JICA) கடன் உதவியின் கீழ் 3,545 மில்லியன் ரூபா செலவில் 8 மாடிகளுடன் நிர்மாணிக்கப்படும் இந்த இருதய சிகிச்சை தொகுதியின் மூலம், அதிநவீன இருதய நோய் மற்றும் இருதய - மார்பு நாடி சத்திரசிகிச்சை வசதிகளைப் பிரதேச மக்கள் இலவசமாகப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு உருவாகவுள்ளது. மேலும், இத்தொகுதியானது அதிநவீன இருதய தீவிர சிகிச்சைப் பிரிவுகள் (Coronary Care & ICU), கெதீட்டர் பரிசோதனைக் கூடங்கள் (Catheterization Labs), எக்ஸ்ரே (X-Ray), ஈ.சி.ஜி (ECG) வசதிகள், விசேட சிகிச்சை நிலையங்கள், வாட்டுக் தொகுதிகள், ஆய்வுக்கூடங்கள், கேட்போர் கூட வசதிகள் மற்றும் நூலகம் உள்ளிட்ட பல வசதிகளைக் கொண்டுள்ளது.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க,
அநுராதபுரம் வைத்தியசாலையை மேம்படுத்துவதற்காக சுமார் 19,000 மில்லியன் ரூபா செலவிலான திட்டங்களை 2027 மற்றும் 2028 ஆம் ஆண்டுகளில் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், தற்போது நடைமுறையில் உள்ள திட்டங்களுடன் சேர்த்து அநுராதபுரம் வைத்தியசாலையின் மேம்பாட்டுக்காக சுமார் 34,000 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பாரிய முதலீடு மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
கடந்த காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட சில அபிவிருத்தித் திட்டங்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கப்படாத காரணத்தினால் நாட்டுக்கும் பொருளாதாரத்திற்கும் பாரிய தாக்கம் ஏற்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நவீன இருதய சிகிச்சை தொகுதியின் நிர்மாணப் பணிகளை 18 மாதங்களுக்குள் வெற்றிகரமாக நிறைவு செய்து மக்களிடம் கையளிக்க சம்பந்தப்பட்ட தரப்பினர் நடவடிக்கை எடுப்பார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்..
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க,
இன்று நாங்கள் மன்னார், முல்லைத்தீவு, திருகோணமலை மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்ட வைத்தியசாலைகளின் அத்தியாவசியமான சில நிர்மாணப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினோம்.
எங்கள் நாட்டின் பொருளாதாரம் பாரிய வீழ்ச்சியடைந்திருந்தது என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஒரு பொருளாதாரம் வீழ்ச்சியடையும் போது அது பொருளாதார மட்டத்தில் மாத்திரம் இருப்பதில்லை. வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறை பாரியளவில் அதிகரிக்கும் போதும், அல்லது எமது வெளிநாட்டு நாணயச் சேமிப்பு பாரியளவில் வீழ்ச்சியடையும் போதும், எமது அரச வருமானம் பாரியளவில் சரியும் போதும் அதன் இறுதி விளைவு மக்களின் வாழ்க்கைத் தரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துவதாகும். எனவே, நாடென்ற வகையில் நாங்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த அவல நிலையின் அனுபவங்களை எதிர்கொண்டிருந்தோம் என்று நான் நினைக்கிறேன். அது மக்களுக்கு பாரிய துயரத்தைக் கொண்டு வந்தது.
எங்கள் நாட்டின் பொருளாதாரம் எங்கு சென்று முடியப்போகிறது என்று உறுதியாகக் கூற முடியாத அளவுக்குப் பிரச்சினைகள் எழுந்தன. அந்த சமயத்தில் ஒரு பொருளாதார நிபுணர் என்னிடம், "எங்கள் பொருளாதாரம் மலையிலிருந்து கீழே சரிந்து கொண்டிருக்கிறது, அது எங்கு நிற்கும் என்று கூற முடியாதளவுக்கு பேரழிவு" என்று கூறினார். அந்த நெருக்கடியால் "வாகனத்தில் செல்பவர்கள் துவிச்சக்கர வண்டி ஓட்டுகிறார். தொலைதூரப் பாடசாலைகளுக்குச் செல்லும் பிள்ளைகள் கிராமப் பாடசாலைகளுக்கு செல்கின்றனர்" என்று அவர் கூறினார். அந்தளவுக்கு நிச்சயமற்ற பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டோம். அந்தப் பொருளாதார நெருக்கடி பாரிய சமூகத் துயரத்தை உருவாக்கியது. ஒரு பாரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியது. அந்த அரசியல் மாற்றத்தின் விளைவாகத்தான் தற்போதைய அரசாங்கம் உருவாகிறது..
இந்த வீழ்ச்சியடைந்து கொண்டிருந்த பொருளாதாரத்தை எவ்வாறு ஸ்திரப்படுத்துவது என்பதுதான் எமக்கு முன்னால் இருந்த பிரதான சவாலானது. தற்போது நாட்டின் பொருளாதாரத்தின் ஒவ்வொரு புள்ளிவிவரத்திலும் மிக முக்கியமான பல ஸ்திரத்தன்மைகள் பதிவாகியுள்ளன. இன்று ஒரு நாடாக எங்களிடம் பலமான பொருளாதாரம் உள்ளது என்று எங்களால் கூற முடியும். உலக வங்கி அண்மையில் எங்களை உயர் நடுத்தர வருமானம் கொண்ட நாடாகப் பெயரிட்டதை நான் பார்த்தேன். அவை எங்களுக்கு சாதகமான புள்ளிவிவரங்களாக இருக்கலாம். இருப்பினும், மக்கள் அடைந்துகொள்ளும் அந்த வெற்றிகள் தங்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு வழிவகுத்துள்ளதா இல்லையா என்பதே மக்களின் தேவையாகும். ஆனால் பொருளாதாரம் நல்லதா கெட்டதா என்பதைத் தங்களது வாழ்க்கைத் தரம் எந்தளவுக்கு எளிதாகியுள்ளது என்பதன் அடிப்படையிலேயே மக்கள் அளவிடுகிறார்கள். எனவே, நாம் இப்போது அடைந்துள்ள பொருளாதார வெற்றிகளை மக்களிடம் கொண்டு செல்வதற்கே நாம் கவனம் செலுத்தியுள்ளோம்.
மக்களின் வாழ்க்கையை உயர்த்த வேண்டுமானால் சிறந்த சேவைகளை வழங்க வேண்டும். அந்தச் சேவைகளில் எங்களுக்கு மிக முக்கியமான சில சேவைகள் உள்ளன. அடுத்த வருடம் எமது வரவு செலவுத் திட்டத்தில் அதிகளவான வீதிகள் மற்றும் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
அடுத்த மிக முக்கியமான விடயமாகக் கல்வி குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. நாட்டின் கல்வியில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக நாங்கள் பெரும் முயற்சி எடுத்து வருகிறோம். அதில் சில முரண்பாடுகள் உள்ளதை நாங்கள் அறிவோம். உலகில் எப்போதுமே மக்களைப் பழக்கவழக்கங்களிலிருந்து விடுவிப்பது சற்று கடினமானது. பழக்கவழக்கங்களிலிருந்து விடுவிக்க முற்படும்போது முரண்பாடு ஏற்படுகிறது. இருப்பினும், நாங்கள் அதே பழக்கவழக்கங்களிலேயே தொடர்ந்து இருந்தால் மனித சமூகம் இந்த அளவுக்கு வளர்ந்திருக்காது. அந்தந்தக் காலப்பகுதியில் தோன்றிய அரசியல் அதிகாரங்கள், தலைமைத்துவங்கள், பழங்குடி தலைவர்களாக இருக்கலாம், அந்த பழங்குடி சமுகங்களிலிருந்து அந்தப் பழக்கவழக்கங்களை விடுவித்ததன் காரணமாகத்தான் இந்த மனித சமூகம் ஒரு வளர்ந்த சமூகமாக உருவானது.
எனவே, எங்களில் சிலர் அந்தப் பழைய பிற்போக்கான, அதாவது பழைய நிலைக்குள், இந்தச் சமூகத்தை முடக்க முயற்சிக்கிறார்கள். ஆனால் நாங்கள் முற்போக்கான, எதிர்கால நோக்குடைய அரசியல் இயக்கமாகும். எனவே, அந்த முரண்பாடுகளை எதிர்கொண்டு நாங்கள் முழுமையாக இந்தக்கல்வித் துறையில் ஒரு பாரிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறோம். இல்லாவிட்டால் கிராமப்புற மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த முடியும் என்று நான் நினைக்கவில்லை.
அடுத்த மிக முக்கியமான விடயம் ஆரோக்கியமான வாழ்க்கை. எங்களுக்கு என்ன கிடைத்தாலும் பிரயோசனமில்லை, எங்களுக்கு ஒரு நோய் நொடியுடன் கூடிய வாழ்க்கை அமைந்திருந்தால், எங்களுக்கு ஒரு நோய் ஏற்பட்டால் சிறந்த மருத்துவ சேவை இல்லையெனில் ஏனைய செல்வங்களால் எங்களுக்கு எந்தப் பயனுமில்லை.
எனவே, எமது மிக முக்கியமான செல்வம் சிறந்த, ஆரோக்கியமான வாழ்க்கைதான். எனவே, இந்த ஆரோக்கியமான வாழ்க்கையை வழங்குவதற்காகவும், அதற்கான சேவைகளை விரிவுபடுத்துவதற்காகவும் எமது அரசாங்கம் பாரிய கவனம் செலுத்தியுள்ளதுடன், இதற்காக மூன்று துறைகள் மீது நாங்கள் கவனம் செலுத்தியுள்ளோம்.
இலவச சுகாதார சேவையை மேலும் மக்களுக்கு நெருக்கமாக்குவது அதில் ஒன்றாகும். இப்போதும் எங்களிடம் கிராமப்புற வைத்தியசாலைக் கட்டமைப்பொன்று உள்ளது. இருப்பினும், இந்தச் சேவையை கிராம மக்களுக்கு மேலும் நெருக்கமாக்க முடியுமா? அதற்காகத்தான் நாங்கள் "ஆரோக்கியா" வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளோம்.
குறிப்பாக, உலகில் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக, கடந்த காலங்களில் உலகளாவிய சுகாதார சேவை மிகப் பெரிய முன்னேற்றங்களை அடைந்துள்ளது. எனவே, நாம் பழமையான உபகரணங்கள், பழைய தொழில்நுட்பம் மற்றும் பழைய மருத்துவ முறைகளுடன் தொடர முடியாது. உலகில் உருவாகியுள்ள நவீன மேம்பட்ட உபகரணங்கள் மற்றும் மருத்துவ முறைகளை நமது நாட்டிற்கு கொண்டு வர வேண்டும். எனவே, மேம்படுத்தப்பட்ட மிக நவீன சுகாதார சேவையை உருவாக்குவது நமது இரண்டாவது எதிர்பார்ப்பாகும். மிகவும் சிறந்த முகாமைத்துவ முறையொன்றை உருவாக்குவதே மூன்றாவது எதிர்பார்ப்பாகும்.
அதன்படி, இலவச சுகாதாரத் துறையை மக்களுக்கு மேலும் நெருக்கமாக்குவது, உலகின் அதிநவீன உபகரணங்கள் மற்றும் மருத்துவ முறைகளை இலங்கைக்குக் கொண்டு வருவது, மற்றும் முறையான முகாமைத்துவ கட்டமைப்பொன்றை நிறுவுவது ஆகிய 03 விடயங்கள் குறித்து நாம் கவனம் செலுத்தியுள்ளோம்.
நமக்கு மிகவும் கசப்பான அனுபவமொன்று உள்ளது. அந்த கசப்பான அனுபவம் என்னவென்றால், நமது இந்தத் திட்டங்கள் தாமதமாவதால் ஏற்படும் பாதிப்பாகும். அந்த பாதிப்பு இரண்டு வழிகளில் ஏற்படுகிறது. முதலாவது - நாம் பணத்தை முதலீடு செய்துள்ளோம், ஆனால் சேவையைப் பெறுவதில் ஏற்படும் தாமதம். அது ஒரு பாதிப்பு. இரண்டாவது - நாம் பணத்தை முதலீடு செய்துள்ளோம், ஆனால் அந்த சமயத்தில் செய்யப்பட்ட மதிப்பீடு தாமதத்தின் காரணமாக செலவு மிகவும் அதிகமாக உயர்கிறது. அதுவும் மற்றொரு பாதிப்பாகும்.
சுகாதார அமைச்சின் 28 பில்லியன் மதிப்பீட்டிலான திட்டத்தின் புதிய மதிப்பீடு தற்போது 58 பில்லியன் என சுகாதார அமைச்சர் என்னிடம் கூறினார். அதாவது, அந்த சமயத்தில் அதை 28 பில்லியன் செலவில் நிறைவு செய்திருந்தால் நமக்கு 28 பில்லியன் மாத்திரமே செலவாகியிருக்கும், ஆனால் இன்று நமக்கு 58 பில்லியன் செலவாகிறது. அப்படியாயின் 30 பில்லியன் மேலதிகமாக செலவிட நேரிட்டுள்ளது. அதாவது அது மதிப்பீட்டுத் தொகையை விட இரண்டு மடங்குக்கும் அதிகம், அதன் அர்த்தம் திட்டமிட்ட வேலையை போல் இன்னுமொரு மடங்கு வேலையை நம்மால் செய்திருக்க முடியும் என்பதாகும்.
குறிப்பாக, இந்த வீழ்ச்சிக்கு பொருளாதார வீழ்ச்சியே காரணம் என்பதை நான் அறிவேன். பொருளாதார வீழ்ச்சி காரணமாக ஓரளவிற்கு நமக்கு தடைகள் ஏற்பட்டன. ஏனெனில், ஒரு புதிய திட்டத்தைத் தொடங்குவது எளிது. ஆனால் முடங்கிப்போன ஒரு திட்டத்தை முன்னெடுப்பது மிகப்பெரிய குழப்பமான நிலையாகும். அமைச்சரும்,அமைச்சின் செயலாளரும், நமது அதிகாரிகளும் பெரும் முயற்சியெடுத்து இந்தச் சிக்கலை கணிசமான அளவிற்கு தற்போது தீர்த்து வைத்துள்ளனர் என்று நான் நினைக்கிறேன்.
அதாவது, இந்த குறிப்பிட்ட தருணத்தில் அவற்றைச் செய்யாததன் விளைவுகள் இன்று ஒரு நாட்டிற்கும், மக்களுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. எனவே, இந்தத் திட்டம் எப்போது நிறைவடையும் என்று நான் இப்போதும் கேட்டேன். 18 மாதங்களில் இதை நிறைவு செய்வதாக அவர் கூறினார். எனவே, இந்தத் திட்டம் 18 மாதங்களில் நிறைவடையும் என்று நாம் எதிர்பார்க்கின்றோம்.
சுகாதாரத் துறையில், நாம் பெரும் முயற்சியெடுக்கின்ற முக்கிய விடயம் இதில் மனித வளத்தை மேம்படுத்துவதாகும். நான் அனுராதபுரம் வைத்தியசாலை தொடர்பில் அதிக நம்பிக்கை வைத்துள்ளேன். எனது தாயாரும் சுமார் ஒரு மாதத்திற்கு முன்னர் மூன்று முறை இந்த வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்றார். அங்கு மிகவும் சிறந்த மருத்துவர்கள், தாதியர்கள், ஊழியர்கள் மற்றும் உதவி பணியாளர்கள் பணியாற்றுகின்றனர்.
கடந்த காலங்களில் வைத்தியர்களை நியமிப்பது குறிப்பிடத்தக்க அளவு தாமதமாகியிருந்தது. ஆனால் நாம் ஆகஸ்ட், செப்டெம்பர் மற்றும் ஒக்டோபர் ஆகிய மூன்று மாதங்களுக்குள், இலங்கை வரலாற்றிலேயே முதன்முறையாக 3 மாதங்களுக்குள் 3,000 வைத்தியர்களை ஆரம்பப் பயிற்சிப் பணிக்காக நியமித்தோம். இது மிகவும் முக்கியமானதொரு முன்னெடுப்பாகும்.
64 பல் வைத்தியர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். சுகாதாரத் துறைக்கு மாபெரும் சேவையாற்றும் தாதிகள் பணிக்குழாத்திற்கு ஏற்கனவே 3,978 பேர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதுடன், ஒக்டோபர் 31 ஆம் திகதிக்குள் மேலும் 2,820 பேரை இணைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. அதன்படி, இக்காலப்பகுதியில் தாதிகள் பணிக்குழாத்திற்கு மாத்திரம் 6,788 பேர் இணைக்கப்படுகின்றனர்.
மாணவ தாதியர் பயிற்சிக்காக ஏற்கனவே 4,869 பேர் சேர்த்துக்கொள்ளப்பட்டதுடன், 2027 ஜனவரிக்குள் தாதியக் கல்லூரிகளுக்கு மேலும் 3,000 பேர் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். அதன்படி, மொத்தமாக தாதியத் துறையில் 7,869 பேரால் எமது அரச வைத்தியசாலை கட்டமைப்பு முன்னேற்றம் அடைகிறது.
சுகாதார உதவிப் பணியாளர்களாக ஏற்கனவே 1,860 பேர் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதுடன், 2027 ஜனவரிக்குள் மேலும் 1,100 பேரை பணியில் அமர்த்துவதற்கு அமைச்சு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. துணை மருத்துவ சேவைகளுக்காக ஏற்கனவே 306 பேர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதுடன், மேலும் 301 பேர் பயிற்சி பெற்று வருகின்றனர். இணை மருத்துவ சேவைகளுக்காக1,380 பேர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதுடன், 303 பேர் பயிற்சி பெற்று வருகின்றனர்.
இலங்கையில் நீண்ட காலத்திற்குப் பிறகு, இலவச சுகாதார சேவையை முன்னெடுப்பதற்குத் தேவையான மனிதவளத்தை முழுமையாக வழங்க நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். நமது நாட்டின் வைத்தியர்கள் உட்பட மொத்த சுகாதாரப் பணியாளர்களும் நோயாளிகளுக்காக அர்ப்பணிப்புடன் செய்யும் மாபெரும் உழைப்பையும் சேவையையும் நான் மிகவும் மதிக்கிறேன்.
அதேபோன்று, அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் தற்போது பல பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. 8 மாடிகளைக் கொண்ட இருதய நோய் மற்றும் இருதய மார்பு அறுவை சிகிச்சை பிரிவின் நிர்மாணத்திற்காக 3,545 மில்லியனும், உபகரணங்களுக்காக 4,490 மில்லியனும் என மொத்தமாக 8,035 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மருத்துவ விநியோக களஞ்சியத் தொகுதி 01 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியைக் கொண்டுள்ளதுடன், தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் மருத்துவ வார்ட் பிரிவுக்காக 1,186 மில்லியன் ரூபா செலவிடப்படுகிறது.
2027 மற்றும் 2028 ஆம் ஆண்டுகளில் அநுராதபுரம் வைத்தியசாலைக்காக மாத்திரம் 19 பில்லியன் ரூபா (19,000 மில்லியன் ரூபா) செலவில் அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே 9.7 பில்லியன் ரூபாவிற்கான பணிகள் நடைபெற்று வருவதுடன், எதிர்காலத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள 19 பில்லியன் மற்றும் தற்போதைய திட்டங்கள் உட்பட மொத்தமாக 34 பில்லியன் ரூபாவிற்கு (34,000 மில்லியனுக்கும்) அதிகமான பாரிய முதலீட்டை அநுராதபுரம் வைத்தியசாலை அபிவிருத்திக்காக ஒதுக்கீடு செய்ய நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம். முறையான நிர்வாகத்துடன் மக்களுக்குச் சிறந்த சேவையை வழங்குவதே எமது ஒரே நோக்கமாகும்.
சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க
நமது நாட்டில் நிகழும் மொத்த மரணங்களில் 80% க்குக் காரணம் தொற்றா நோய்களாகும். இவ்வாறு உயிரிழக்கும் 80 பேரில் அதிகமானவர்கள் உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயாளர்களாகும். அவற்றை நாம் 'NCDs' (Non-Communicable Diseases) என்று அழைக்கிறோம்.
இவற்றிலுள்ள பிரதான சிக்கல் என்னவென்றால், இந்த இரண்டு நோய்களும் ஒன்றுக்கொன்று தொடர்பானதுடன் ஒரு நபரின் ஆரோக்கியத்தில் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்துவதுமாகும். இலங்கையின் தற்போதைய நிலையைப் பார்த்தால், உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் முறையான கட்டுப்பாட்டுக்குள் (Effective control) இருப்பவர்கள் 50% மாத்திரமே ஆகும். அதுபோன்று, நீரிழிவு நோயாளிகளில் முறையான கட்டுப்பாட்டில் இருப்பவர்கள் 25% போன்ற சிறிய சதவீதத்தினர்தான். இந்நிலைமையின் காரணமாக இன்று சமூகத்தில் ஒரு பாரிய பிரச்சினைக்குரியதாக இது மாறியுள்ளது.
இந்த இரண்டு நோய்களிலும் உள்ள மிக மோசமான சிக்கல் 'MI' எனப்படும் மாரடைப்பு ஏற்படுவதாகும். மிக முக்கியமான சிக்கலாக மாறுவதும் இதுவே. அப்படியானால், இந்த நவீன நிலைமையை நாம் எவ்வாறு கட்டுப்படுத்துவது? இதுவே நம் முன்னால் உள்ள மிகப்பெரிய சவாலாகும். நாடு முழுவதும் நவீன வசதிகளை உருவாக்குவதுடன், நமது நாட்டின் சனத்தொகை கட்டமைப்பில் மற்றும் நோய் நிலைமைகளில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை நமது சுகாதார கட்டமைப்பு அடையாளம் கண்டிருக்க வேண்டும். அதன்படி, நமது சுகாதார கட்டமைப்பை அதற்குப் பொருத்தமான முறைகளுக்கு ஏற்ப அமைத்துக்கொள்ள வேண்டியுள்ளது.
ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு ஏற்ப, சுகாதார அமைச்சரின் வழிகாட்டலின் கீழ், சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சினால் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவது அத்தகைய ஒரு மாபெரும் செயற்பாடாகும். அதில் மூன்று பிரதான பகுதிகள் உள்ளன. ஆரோக்கியா (Arogya), Cluster Systems மற்றும் High-End Care Institutions ஆகிய மூன்றையும் எமது சுகாதார கட்மைப்புக்குப் பொருத்தமான வகையில் அமைத்துக்கொள்வது எதிர்காலத்தில் மிகவும் அவசியமானதாகும்.
இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் Akio Isomata
அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் புதிய இருதய நோய் மற்றும் இருதய மார்பு அறுவை சிகிச்சை பிரிவுக் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டும் இத்தருணத்தில் கலந்துகொள்ளக் கிடைத்தமை எனக்குக் கிடைத்த பெரும் கௌரவமாகும். இன்றைய தினம் இந்நிகழ்வை வெற்றிகரமாக நடத்த அர்ப்பணிப்புடன் செயற்பட்ட கௌரவ ஜனாதிபதிக்கும், கௌரவ அமைச்சர்களுக்கும் மற்றும் அனைத்து இலங்கைத் தரப்பினர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சுகாதாரத் துறையில் இலங்கையுடன் இணைந்து செயற்படுவதில் ஜப்பானுக்கு நீண்ட வரலாறு உண்டு. உலகளாவிய ரீதியில் ஏற்படும் மொத்த மரணங்களில் 32% மானவை இருதய நோய்களால் ஏற்படுகின்றன, அதனை ஒப்பிடும்போது இலங்கையில் மரணங்களின் சதவீதம் உயர் மட்டத்தில் காணப்படுகிறது. ஜப்பானிலும் இரண்டாவது அதிகூடிய மரண எண்ணிக்கைக்குக் காரணமாக அமைவது இருதய நோய்களே. அதனாலேயே இவற்றுக்கு முகங்கொடுக்கும் விதம் குறித்த எமது அனுபவங்களையும் அறிவையும், பௌதிக உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் வைத்திய நிபுணர்களின் பயிற்சிகள் என்பவற்றை உதவிகளாக வழங்குவதற்கு நாம் சிந்தித்தோம்.
இலங்கையின் நீண்டகால மற்றும் நம்பிக்கைக்குரிய பங்காளியாகத் திகழக் கிடைத்ததையிட்டு ஜப்பான் பெருமை கொள்வதுடன், இத்திட்டம் எமது இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவையும் பங்காளித்துவத்தையும் மேலும் வலுப்படுத்தும் என நான் நம்புகிறேன். மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும், நிலைபேறான சுகாதார கட்டமைப்பினை அடைந்துகொள்வதற்கும் இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிக்கு ஆதரவளிக்க ஜப்பான் எப்பொழுதும் தயாராகவுள்ளது.
சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க, வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் வைத்தியர் சுசில் ரணசிங்க, வடமத்திய மாகாண ஆளுநர் வசந்த குமார விமலசிறி, பாராளுமன்ற உறுப்பினர்கள், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா மற்றும் பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள், சுகாதார அமைச்சின் அதிகாரிகள், ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் (JICA) இலங்கை அலுவலகத்தின் தலைமைப் பிரதிநிதி Shigeo Honzu உள்ளிட்ட பிரதிநிதிகள், வைத்தியசாலை பணிப்பாளர் மற்றும் பணிக்குழாமினர் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.





