தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் உட்கட்டமைப்பு மேம்பாட்டு வேலைத்திட்டங்களின் கீழ், மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தில் நீண்டகாலமாகப் பழுதடைந்த நிலையில் காணப்பட்ட ஆறு வீதிகள் புனரமைக்கப்பட்டு, கடந்த வெள்ளிக்கிழமை மக்கள் பயன்பாட்டிற்காக உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டன.
பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கந்தசாமி பிரபு அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, குறித்த வீதிகளை மக்களிடம் கையளித்தார்.
புனரமைக்கப்பட்ட வீதிகள்:
- குருக்கள்மடம் ஸ்ரீ முருகன் 2ஆம் குறுக்கு வீதி
- மாங்காடு வேம்பு 1ஆம் குறுக்கு வீதி
- தேற்றாத்தீவு – பழைய தபால் நிலைய வீதி
- தேற்றாத்தீவு தெற்கு – கடற்கரை வீதி
- களுதாவளை – பொள்ளுக்காரன் வீதி
- களுவாஞ்சிகுடி – திருமுருகன் கோவில் வீதி
‘பிரஜா சக்தி’ நிதியின் ஊடாக நவீன முறையில் அபிவிருத்தி செய்யப்பட்ட இவ்வீதிகள், நீண்டகாலமாகப் பயணச் சிரமங்களை எதிர்கொண்ட மக்களுக்கு பெரும் நிவாரணமாக அமைந்துள்ளன.
இந்நிகழ்வின் மிகச் சிறப்பு அம்சமாக, இவ்வீதிகளின் எதிர்காலப் பயனாளர்களும் உரிமையாளர்களுமான அப்பகுதி சிறார்களும் குழந்தைகளும், நாடாளுமன்ற உறுப்பினருடன் இணைந்து புதிய வீதிகளைத் தங்கள் கைகளாலேயே திறந்து வைத்தனர். இந்த நெகிழ்ச்சியான தருணம் அனைவரது கவனத்தையும் ஈர்த்ததுடன், நிகழ்விற்கு தனிச்சிறப்பையும் ஏற்படுத்தியது.
இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் உதய ஶ்ரீதர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச சபை உறுப்பினர்கள், பிரஜா சக்தி பிரதிநிதிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இன்றைய அபிவிருத்தி — நாளைய தலைமுறைக்கான முதலீடு.










