இலங்கையிலுள்ள யானைகளில் சுமார் 30 சதவீதமான யானைகள் செவிப்புலனை இழந்துள்ளதாக விவசாய மற்றும் கால்நடை வளர்ப்பு பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
தரம் குறைந்த யானை வெடிகளின் பயன்பாடே இதற்கு முக்கியக் காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வனவிலங்கு அதிகாரிகளுக்கு உந்துருளிகளை வழங்கும் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன, தரமற்ற யானை வெடிகள் வெடிக்கும் போது ஏற்படும் பலத்த சத்தம், குட்டிகள் உட்பட யானைகளின் செவிப்புலனைப் பாதித்து, நாளடைவில் அவற்றுக்குக் காது கேட்காமல் போவதாகத் தெரிவித்தார்.
அத்துடன், துப்பாக்கிச் சூடு போன்ற மனித நடவடிக்கைகளால் பல யானைகள் காயமடைந்து, உடலுக்குள் துப்பாக்கி குண்டுகளுடன் உலவுவதாகவும் சுட்டிக்காட்டினார்.
யானைகள், குரங்குகள், காட்டுப்பன்றிகள், முள்ளம்பன்றிகள் மற்றும் மயில்கள் சம்பந்தப்பட்ட மனித-வனவிலங்கு மோதல்கள் குறித்துப் பேசிய அவர், சில பகுதிகளில் யானை-மனித மோதலை விடவும் குரங்கு-மனித மோதல் தீவிரமடைந்துள்ளதாகத் தெரிவித்தார்.
வனவிலங்குகளால் பயிர்கள் அழிக்கப்படுவதால் நாட்டின் விவசாய உற்பத்தி பெரும் சவாலைச் சந்தித்து வருவதாக வேதனை தெரிவித்தார்.
காடுகளில் உணவு மற்றும் நீர் பற்றாக்குறை நிலவுவதும், கிராமங்களில் அவை எளிதாகக் கிடைப்பதுமே வனவிலங்குகள் மனித குடியிருப்புகளுக்குள் நுழைவதற்குக் முக்கியக் காரணம் எனக் குறிப்பிட்ட பிரதி அமைச்சர், காடுகளுக்குள்ளேயே விலங்குகளுக்குத் தேவையான உணவு மற்றும் நீர் வசதியை உறுதி செய்வதன் மூலமே மனித-வனவிலங்கு மோதலைக் குறைக்க முடியும் என வலியுறுத்தினார்.





