மட்டக்களப்பு புதுக்குடியிருப்பில் ஐந்து தசாப்தங்களுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட கதிரவன் கலைக்கழகம், தனது 50 ஆண்டுகால கலை, சமூக மற்றும் பண்பாட்டுப் பயணத்தை நினைவுகூரும் வகையில் பொன்விழாவை நேற்று (27) மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் ஹோட்டலில் வெகு சிறப்பாகக் கொண்டாடியது.
“ஊரிலிருந்து உலகம் வரை” என்ற தொனிப்பொருளிலும், “வாழும் தமிழ் வாழ்க” என்ற மகுட வாசகத்தின் கீழும் நடைபெற்ற இப்பொன்விழா, கலைஞர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், கல்வியாளர்கள், சமய மற்றும் சமூகத் தலைவர்கள், அரச அதிகாரிகள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களின் பங்கேற்புடன் சிறப்புப் பெற்றது.
1976ஆம் ஆண்டு ஏப்ரல் 28ஆம் திகதி, மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு கிராமத்தில் கலாபூஷணம் கிராமியக் கலைஞர் சி. தங்கராசாவின் தலைமையில் இளைஞர்களை ஒன்றிணைத்து கதிரவன் கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது.
கிராமியக் கலைகளை அடிப்படையாகக் கொண்டு தனது பயணத்தை ஆரம்பித்த கதிரவன் கலைக்கழகம், காலப்போக்கில் சமூக, புராண மற்றும் இதிகாச நாடகங்கள், வீதி நாடகங்கள், பட்டிமன்றங்கள், சஞ்சிகை மற்றும் நூல் வெளியீடுகள், கலை நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் தனது செயற்பாடுகளை விரிவுபடுத்தியது.
கலைச் செயற்பாடுகளுடன் சமூக, ஆன்மீக மற்றும் கல்விப் பணிகளிலும் கவனம் செலுத்திய இக்கழகம், கடந்த ஐந்து தசாப்தங்களில் ஆயிரக்கணக்கான கலை மற்றும் சமூக நிகழ்வுகளை முன்னெடுத்து மட்டக்களப்பின் பண்பாட்டுத் தளத்தில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியுள்ளது.
கதிரவன் கலைக்கழகத்தின் பணிகளில் குறிப்பிடத்தக்க ஒன்றாக விளங்கும் வீதி நாடகங்கள், இதுவரை 2,500க்கும் மேற்பட்ட தடவைகள் ஆற்றுகை செய்யப்பட்டுள்ளதுடன், இலங்கை மற்றும் இந்தியாவில் 188 பட்டிமன்ற நிகழ்வுகளும் நடத்தப்பட்டுள்ளன. இதனுடன் நூல் வெளியீடுகள், கலை நிகழ்வுகள் மற்றும் சர்வதேச தினங்களை முன்னிலைப்படுத்திய சமூக விழிப்புணர்வு நிகழ்வுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கதிரவன் கலைக்கழகத்தின் 50ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இலங்கை மற்றும் இந்தியாவில் 50 சிறப்பு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், அதன் நிறைவு நிகழ்வாக இப்பொன்விழா இடம்பெற்றது.





