இந்தோனேஷியாவில் 243 பயணிகளுடன் சென்ற கப்பல் ஜாவா கடலில் காணாமல் போயுள்ளது

 


இந்தோனேஷியாவில் 243 பயணிகளுடன் பயணித்த பயணிகள் கப்பல் ஒன்று, இன்று (13) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஜாவா கடலில் சீரற்ற வானிலையினால் தொடர்பை இழந்து காணாமல் போயுள்ளதாக அந்நாட்டின் தேடல் மற்றும் மீட்பு முகவரகம் தெரிவித்துள்ளது.

‘வர்ஜோ டிரான்ஸ்போர்ட் 8’ என்ற குறித்த கப்பல், சனிக்கிழமை கிழக்கு ஜாவா மாகாணத்தின் சுரபாயா நகரிலிருந்து தெற்கு கலிமந்தனில் உள்ள பஞ்சர்மாசின் நகரை நோக்கிப் புறப்பட்டுள்ளது.

எனினும், நடுக்கடலில் பயணித்துக்கொண்டிருந்தபோது கப்பலுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

அறிக்கை வெளியிடப்படும் வரையிலும் கப்பலுடனான தொடர்பை மீள ஏற்படுத்த முடியவில்லை எனவும், கப்பல் தற்போது எங்குள்ளது என்பது தொடர்பான தகவல் கிடைக்கவில்லை எனவும் மீட்பு முகவரகம் தெரிவித்துள்ளது.

கப்பல் கடைசியாகத் தொடர்பிலிருந்த கடற்பகுதியை மையமாகக் கொண்டு மீட்புக் குழுவினர் தேடுதல் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

 சம்பவம் இடம்பெற்ற கடற்பகுதியில் நிலவிய சீரற்ற வானிலையே கப்பலுடனான தொடர்பு துண்டிக்கப்படுவதற்கான பிரதான காரணமாக இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

17,000க்கும் மேற்பட்ட தீவுகளைக் கொண்ட இந்தோனேசியாவில், விமானப் பயணங்களைவிட குறைந்த செலவில் பயணிக்க முடிவதால், படகு மற்றும் கப்பல் போக்குவரத்து முக்கியமான போக்குவரத்து வழிகளில் ஒன்றாகத் திகழ்கிறது.

எனினும், முறையான பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் பராமரிப்பு நடைமுறைகள் பின்பற்றப்படாதது உள்ளிட்ட காரணங்களால், இந்தோனேசியாவில் கடல்வழி விபத்துகள் அடிக்கடி இடம்பெறுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.