EDITOR
உள்ளூராட்சி வாரத்தை அனுஷ்டிக்கும் முகமாக மட்டக்களப்பு மாநகர சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட “உள்ளூராட்சி வாரம் – 2026” நிகழ்வுகள் திங்கட்கிழமை (14) மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் தொழில்நுட்பக் கல்லூரியில் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
“வளமான நாடு – அழகான வாழ்வு – புத்துயிர்க்கும் புதுநகரம்” என்ற தொனிப்பொருளில் காலை 9 மணிக்கு ஆரம்பமான இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் மற்றும் மாநகர சபை ஆணையாளர் தனஞ் ஜெயன் ஆகியோரால் நடமாடும் சேவை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
உள்ளூராட்சி வாரத்தின் ஒரு முக்கிய நிகழ்வாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நடமாடும் சேவையின் ஊடாக, பொதுமக்கள் பல்வேறு உள்ளூராட்சி சேவைகளை ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு வழங்கப்பட்டது.
இதன்போது ஆதன உரிமையாளர் பெயர் மாற்றம் செய்தல் (ATD), புதிய மற்றும் மேலதிக ஆதனங்களுக்கான இலக்கங்களை வழங்குதல், சொத்து வரிகள் மற்றும் ஏனைய மாநகர சபை வரிகளை அறவிடுதல் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்பட்டன.
அத்துடன், சொத்து வரிகள் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல், புதிய வியாபாரங்களைப் பதிவு செய்வதற்கான விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளுதல் மற்றும் வியாபார உரிமம் (Trade License) தொடர்பான சேவைகளும் முன்னெடுக்கப்பட்டன.
மேலும், பொது சுகாதாரப் பரிசோதனைகள், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் தூய்மைப் பணிகள் தொடர்பான சேவைகளும் வழங்கப்பட்டதுடன், பொதுமக்களுக்கான ஆயுர்வேத மருத்துவ சேவைகள் மற்றும் ஆலோசனைகளும் இடம்பெற்றன.
இதனுடன் கால்நடைகளுக்கான மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சை சேவைகளும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மக்களின் அன்றாட தேவைகளுடன் நேரடியாகத் தொடர்புடைய உள்ளூராட்சி சேவைகளை பொதுமக்களுக்கு இலகுவாகவும் விரைவாகவும் வழங்கும் நோக்கில் இந்த நடமாடும் சேவை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.























































