இலங்கை அரச மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைகளுக்கு நீண்ட காத்திருப்பு: தனியார் மருத்துவமனை வசதிகளைப் பயன்படுத்த மருத்துவர் சங்கம் யோசனை

 



இலங்கையிலுள்ள அரச மருத்துவமனைகளில் சுமார் 25,000க்கும் அதிகமான நோயாளிகள் இதய அறுவை சிகிச்சை, முக்கிய அறுவை சிகிச்சைகள் மற்றும் அவசியமான மருத்துவப் பரிசோதனைகளுக்காக நீண்ட நாட்களாகக் காத்திருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக, ஒருசில இதய அறுவை சிகிச்சைகளுக்கு 2029-ஆம் ஆண்டு வரையிலான காத்திருப்பு காலம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

அரசு மருத்துவமனைகளில் நிலவும் இந்த கடுமையான நெரிசலைக் குறைக்க அரசாங்கம் எடுத்துவரும் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர், விசேட வைத்ய நிபுணர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

 அரச மருத்துவமனைகளில் நிலவும் நீண்ட காத்திருப்புப் பட்டியலைக் குறைப்பதற்காக ஜனாதிபதி நிதியத்திலிருந்து நிதி ஒதுக்கப்படும் என அரசு அறிவித்த போதிலும், அத்திட்டம் இன்னும் சரியாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதனால், தனியார் மருத்துவமனைகளில் அதிக பணம் கொடுத்து சிகிச்சை பெற முடியாத குறைந்த வருமானம் கொண்ட அடித்தட்டு மக்களே மிகக் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர்.

இதற்குத் தீர்வாக, ஜனாதிபதி நிதியத்தின் ஒதுக்கீடுகளை அதிகரித்து, அரச மருத்துவமனைகளில் காத்திருக்கும் நோயாளிகள் குறிப்பிட்ட கட்டண சலுகைகளுடன் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதற்கான வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும். அதேவேளை, அரசு மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு உரிய மேலதிக சேவைக் கொடுப்பனவுகளை வழங்கி தினசரி அறுவை சிகிச்சைகளின் எண்ணிக்கையை உயர்த்துவதுடன், நீண்டகாலத் தீர்வாக நிபுணத்துவ மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரித்து, உள்கட்டமைப்பு மற்றும் மருத்துவ உபகரணங்களின் போதிய இருப்பை உறுதி செய்வதும் அவசியமாகும்.