சைவம் தழைத்தோங்கும் எமது ஈழமணி திருநாட்டிலே, பன்நெடுங் காலமாக சைவமும் தமிழும் தழைத்து ஓங்கி வருவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அனைவருமே மொழியையும் இனத்தையும் நேசித்து போற்றிவந்ததுடன், அதற்கு மேலாகத் தம் சமயமான சைவப் பெருநெறியையும் போற்றிப் பாதுகாத்து வந்துள்ளனர். வழிபாட்டியல் விழுமியங்கள், பண்பாடு, கலை, கலாச்சாரம் அத்தனையையும் போற்றி வந்த ஒரு புண்ணிய பூமியான எமது இலங்கைத் திருநாட்டில், குறிப்பாக வடமாகாணத்தில் இவையெல்லாம் மிகச் சிறப்பாகக் கடைபிடிக்கப்பட்டு வந்தன.
ஆனால், அண்மைக்காலமாக மிகவும் மனதுக்கு வேதனையையும் துயரையும் தரக்கூடிய வகையிலே சில கலாச்சார சீர்கேடுகளும் அசிங்கங்களும் ஆலய வழிபாட்டியல்களில் அரங்கேறி வருவது கண்டிக்கத்தக்கது.
முக்கிய சீர்கேடுகளும் கவலைக்குரிய விடயங்களும்:
* மங்கள வாத்தியங்களின் வீழ்ச்சி: மங்கள வாத்தியக் கலைஞர்களுக்கு வழங்கிய மரியாதை குறைந்து, தேவையற்ற புதிய புகுத்தல்கள் ஆலயங்களில் இடம்பெறுகின்றன.
* கலாச்சாரச் சிதைவும் முறையற்ற நடனங்களும்: பாரம்பரிய மயிலாட்டம் போன்ற கலைகளின் பெயரால், சகோதர சமய மற்றும் சமூகங்களைச் சார்ந்த இளம் பெண்களை அழைத்து நாகரிகமற்ற உடைகளை அணிவித்துத் தேவையற்ற நடனங்கள் நிகழ்த்தப்படுவது மிகவும் கருணைகொடூரமாகப் பார்க்கப்பட வேண்டிய விடயமாகும்.
* வணிகமயமாக்கலும் போட்டி மனப்பான்மையும்: இறைபக்திக்குரிய ஆலயங்களை வணிக மையமாக்கி, இந்தியாவில் இருந்து விமானம் மூலம் பாடகர்களை விலைக்கு அமர்த்தி அழைத்து வந்து, 'ஆலயத்திற்கு இரண்டு, நான்கு, எட்டு' எனப் போட்டி போட்டுக்கொண்டு மேடையேற்றும் கலாச்சாரம் வேதனை அளிக்கிறது.
* பக்திக்குப் பதிலாக சினிமா குத்தாட்டங்கள்: பக்தி இசைக்குப் பதிலாக முழுமையாக சினிமாப் பாடல்களும், குறிப்பாக குத்துப் பாடல்களும் இசைக்கப்பட்டு, எதிர்கால சந்ததியினரை ஆலய வளாகங்களிலேயே மற்றும் பிரகாரங்களிலேயே குத்தாட்டம் போட வைப்பது மன்னிக்க முடியாத செயலாகும். அண்மையில் வட பகுதியில், குறிப்பாக நெல்லியடிப் பிரதேசத்தில் இளம் சிறார்களை மேடையில் ஏற்றி நடத்தப்பட்ட குத்தாட்ட நிகழ்வுகள் இதற்குச் சான்றாகும்.
* அதிகப்படியான மின் ஒளி மற்றும் ஒலித் தொல்லைகள்: அதீதமான மின் ஒளியும் ஒலியும் பக்தர்களின் கண்பார்வையில் நூற்றுக்கணக்கான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன. ஆலயத்திற்கு வந்து ஆனந்தக் கண்ணீர் விட்டு மனக்கஷ்டங்களைத் தீர்க்கும் மக்கள், இன்று வேதனைக் கண்ணீர் சிந்துகின்ற துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.
எமது கோரிக்கைகளும் எச்சரிக்கையும்:
கண்டனத் அறிக்கைகளை வெளியிடுவதால் மட்டுமே இந்த நிலையை மாற்றிவிட முடியாது. ஆலய நிர்வாகங்கள், சமய சமூக அமைப்பு சார்ந்தவர்கள், திருவிழா உபயங்கள் செய்வோர் அனைவரும் இதனை ஆழமாக உணர வேண்டும்.
* ஆலய வழிபாடுகளில் காணப்படும் தேவையற்ற பண்பாட்டு விழுமிய, கலாச்சார மரபு மீறல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
* போட்டி மனப்பான்மையைத் தவிர்த்து, இறைவன் மேல் கொண்ட பக்தியின் உச்சியை உணர வேண்டும்.
* கிராமங்கள் தோறும் சரியான வழிபாட்டியல் முறைகளைக் கொண்டுவந்து, எமது சமயத்தையும் சந்ததியினரையும் நல்வாழ்வு பெறச் செய்ய வேண்டும்.
இனிவரும் காலங்களிலாவது இவ்வாறான செயற்பாடுகள் முழுமையாகத் தவிர்க்கப்பட வேண்டும் என எமது இந்து குருமார் அமைப்பு சார்பில் மிகமிகப் பணிவாகக் கேட்டுக்கொள்கிறோம்.
."சிவாகம கலாநிதி "சிவஸ்ரீ. கு.வை. க. வைத்தீஸ்வர குருக்கள். தலைவர்,
இந்துக் குருமார் அமைப்பு..........."பிரதிஷ்டா பூஷணம் ". சிவஸ்ரீ. ச. சாந்தரூப குருக்கள். செயலாளர், இந்துக் குருமார் அமைப்பு.





