மட்டக்களப்பு, ஆகஸ்ட் 18, 2026: உலக தலசிமியா தினத்தை முன்னிட்டு, எகட்
ஹரிதாஸ் நிறுவனத்தின் அனுசரணையுடன், தலசிமியா விழிப்புணர்வு நடைபவனியும்
அதனைத் தொடர்ந்து தலசிமியா தின நிகழ்வும் மட்டக்களப்பில் நடைபெற்றன.
காந்தி
பூங்காவில் இருந்து காலை 8.30 மணியளவில் ஆரம்பமான விழிப்புணர்வு நடைபவனி,
பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை வரை சென்றடைந்தது. தொடர்ந்து,
சதுர்முகம் கேட்போர் கூடத்தில் தலசிமியா தின நிகழ்வு நடைபெற்றது.
பிராந்திய
சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் R. முரளீஸ்வரன் அவர்களின் தலைமையில்
நடைபெற்ற இந்நிகழ்வை, தொற்றா நோய்கள் பிரிவிற்குப் பொறுப்பான வைத்திய
அதிகாரி டாக்டர் M. ருதேசன் ஒருங்கிணைப்புடன் நடந்த
நிகழ்வில் எகட்
ஹரிடாஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அருட்பணி S. அன்டனி ஜெயராஜ், பிராந்திய
சுகாதார சேவைகள் பணிமனை உத்தியோகத்தர்கள், மட்டக்களப்பு மாவட்டத்தில்
தலசிமியா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்ப
உறுப்பினர்கள், பிராந்தியத்திற்கு பொறுப்பான வைத்திய அதிகாரிகள், லயன்ஸ்
கழகத்தின் பெண்கள் அணியினர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
மேலும்,
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையிலிருந்து வருகை தந்த பிரதி
பணிப்பாளர் மற்றும் தொற்றா நோய்கள் பிரிவின் வைத்திய அதிகாரியும் நிகழ்வில்
கலந்துகொண்டனர்.
தலசிமியாவால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும்
சிறுவர்களின் பங்கேற்புடன் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. சிறுவர்கள்
மற்றும் மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் இந்நிகழ்ச்சிகள்
அமைந்திருந்தன.
நிகழ்வில் தலைமை உரையாற்றிய பிராந்திய சுகாதார
சேவைகள் பணிப்பாளர், தலசிமியா தொடர்பான விழிப்புணர்வை பொதுமக்களிடம் மேலும்
கொண்டு செல்ல வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். தலசிமியா
நோயாளர்களுக்குத் தேவையான இரத்தத்தை வழங்குவதற்காக பொதுமக்கள் முன்வந்து
இரத்ததானம் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
மேலும்,
தலசிமியா மரபணுவை காவிகளாகக் கொண்டிருப்பவர்களை (Carrier) அடையாளம்
காண்பதற்கான பரிசோதனைகளை மேற்கொள்வதன் முக்கியத்துவம் குறித்தும்,
இதுதொடர்பான விழிப்புணர்வை சமூக மட்டத்தில் ஏற்படுத்துவதன் அவசியம்
குறித்தும் வலியுறுத்தப்பட்டது.
தலசிமியா பிராந்திய நிலையத்திற்குப்
பொறுப்பான வைத்திய அதிகாரி டாக்டர் S. ரவிச்சந்திரன் உள்ளிட்ட தலசிமியா
சிகிச்சை மற்றும் பராமரிப்புடன் தொடர்புடைய வைத்திய அதிகாரிகளும் நிகழ்வில்
கலந்துகொண்டனர்.
இதன்போது, லயன்ஸ் கழகத்தின் சார்பில் தலசிமியா
நோயால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.
மேலும், தலசிமியா சேவையில் பங்களிப்பு செய்த வைத்திய அதிகாரிகள் மற்றும்
முக்கிய அதிதிகள் நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
தலசிமியா
நோயைத் தடுப்பதற்கும், நோயாளர்களின் வாழ்க்கைத் தரத்தை
மேம்படுத்துவதற்கும் சமூகத்தின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என நிகழ்வில்
வலியுறுத்தப்பட்டது.
தலசிமியா தின நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு LIONS CLUB OF BATTICALOA LADY STARS FOR HUMANITY கழகத்தினர் refreshment உபசரிப்பு அனுசரணை வழங்கி இருந்தனர்.






















































