தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட செயலகம் இணைந்து 2026ஆம் ஆண்டுக்கான “மாணவர் தூதுவர் மாவட்ட தீர்வு மாநாடு” நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் மாவட்ட செயலக உதவி மாவட்ட செயலாளர் ஜி.பிரணவன் மேற்பார்வையில் மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் திருமதி நிஷா றியாஸ் மற்றும் மாவட்ட உள சமூக உத்தியோகத்தர் சு.பிரபாகர் ஆகியோரின் இணைப்பாக்கத்தில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இதன் போது பாடசாலையின் சிரேஸ்ட மாணவ தலைவர்கள் மற்றும் பொறுப்பாசிரியர்களை உள்ளடங்கிய சிறுவர் பாதுகாப்பு மாநாட்டில் பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களை சிறுவர் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளில் நேரடியாக ஈடுபடுத்தி பாதுகாப்பான பாடசாலைச் சூழலை உருவாக்குவதே இவ் மாநாட்டின் பிரதான நோக்கமாகும்.
மாணவர்களின் சிறுவர் உரிமைகள் பாதுகாப்பு மற்றும் சமூகப் பொறுப்புணர்வு தொடர்பான தகவல்களை சக மாணவர்களிடமும் சமூகத்திடமும் கொண்டு செல்லும் வகையில் “மாணவர் தூதுவர்” எனும் அணுகுமுறையின் கீழ் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
மேலும் சிறுவர் பாதுகாப்பு இணையப் பாதுகாப்பு, வன்முறைத் தடுப்பு, சிறுவர் உரிமைகள் மற்றும் அவசரகாலங்களில் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் தொடர்பாக விரிவான விளக்கங்களும் வழங்கப்பட்டன.
இவ் மாநாட்டின் மூலம் மாணவர்களிடையே பாதுகாப்பு விழிப்புணர்வு அதிகரிப்பதோடு, சிறுவர் உரிமைகளை மதிக்கும் பாதுகாப்பான கல்விச் சூழலை உருவாக்குவதற்கான முக்கிய முன்னெடுப்பாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந் நிகழ்வின் வளவாளர்களாக வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பாமினி அர்ச்சுதன்,
பட்டிருப்பு வலய உதவி கல்வி பணிப்பாளர் திருமதி என். பிரதீபன் , மேற்கு
கல்வி வலய உதவி பணிப்பாளர் ரீ.குணரத்தினம், சிரேஸ்ட நன்னடத்தை அதிகாரி
நயிஈமுதீன், பட்டிருப்பு கல்வி வலய முறைசாரா கல்வி இணைப்பாளர் திருமதி
ரீட்டா கலைச்செல்வன், ஆகியோர் கலந்துகொண்டனர்.
மாவட்டத்தில் சிறுவர்கள் எதிர் நோக்கும் பல்வேறுபட்ட பிரச்சினைகள் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன் அவற்றை தீர்ப்பதற்கான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களை துறைசார் நிபுணர்கள் வழங்கினர்.





