கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத் துறையின் பாரம்பரிய அரங்க விழா: மாமாங்கத் தீர்த்தக்கரையில் கோலாகலமாக அரங்கேறிய "ஆளுமையாள் ஔவை" கூத்து!

 



























































செய்தி ஆசிரியர் 

மட்டக்களப்பு மாமாங்கப் பிள்ளையார் ஆலயத் தீர்த்தோற்சவத் திருவிழாவைச் சிறப்பிக்கும் வகையில், கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நுண்கலைத் துறை ஆண்டுதோறும் நடத்தும் பாரம்பரிய அரங்க விழா, ஆலய முற்றத்தில் அமைக்கப்பட்டுள்ள வட்டக்களரியில்   வெகு சிறப்பாக நடைபெற்றது.

கடந்த 04.08.2026 செவ்வாய்க்கிழமை முற்பகல், நுண்கலைத் துறைத் தலைவர் திருமதி துஷ்யந்தி சத்தியஜித் அவர்களின் தலைமையில் மங்கல தீபமேற்றலுடன் இவ்விழா ஆரம்பமானது.

இவ்வைபவத்தில் கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கணேஸ் சுரேஷ் பிரதம அதிதியாகவும், சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவனத்தின் பணிப்பாளர் பேராசிரியை புளோரன்ஸ் பாரதி கெனடி சிறப்பு அதிதியாகவும் கலந்துகொண்டதுடன், ஆலய வண்ணக்கர்களான திரு கி. புவனச்சந்திரா மற்றும் திரு உ. சுவேந்திரகுமார் ஆகியோர் கௌரவ அதிதிகளாகக் கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர்.

மேலும், பேராசிரியர்கள் ஜெ. கெனடி, சி. ஜெயசங்கர், வ. இன்பமோகன், முதுநிலை விரிவுரையாளர் அழகரெட்ணம், முன்னாள் வண்ணக்கர் திரு அரசரெட்ணம், மூத்த ஆக்க இலக்கியப் படைப்பாளர் வி. கௌரிபாலன் மற்றும் அண்ணாவியார் சீ. அலக்சாண்டர் உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்களும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

விழாவின் முக்கிய நிகழ்வான "ஆளுமையாள் ஔவை" வடமோடிக் கூத்து, ஆரம்ப நாளில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாகத் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, நேற்றைய தினம் (06.08.2026 வியாழக்கிழமை) இரவு 9.00 மணிக்கு வட்டக்களரியில் வெற்றிகரமாக அரங்கேற்றப்பட்டது.

  •      இக்கூத்தானது ஓய்வுநிலை அதிபரும் கல்லடி சித்திவிநாயகர் அறநெறிப் பாடசாலை ஆசிரியருமான திருமதி தே. அருட்ஜோதி அவர்களின் தயாரிப்பிலும், விரிவுரையாளர் து. கௌரீஸ்வரன் அவர்களின் நெறியாள்கையிலும் உருவாக்கப்பட்டதுடன், அண்ணாவியார் சி. ஞானசேகரம் அவர்களின் தலைமையில் களரி ஏற்றப்பட்டது. இதில் கல்லடி சித்திவிநாயகர் அறநெறிப் பாடசாலை மாணவர்களும், அன்புநெறிக் கலை மன்ற உறுப்பினர்களும் நடிகர்களாகப் பங்கேற்றுத் தமது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.

சங்க காலப் புலவர் ஔவையாரின் தூது மற்றும் ஆளுமையை மையமாகக் கொண்டு இக்கூத்து வடிவமைக்கப்பட்டுள்ளது. "சங்க கால ஔவையார் வயதான மூதாட்டி அல்ல; அவர் அதியமானின் அரசவைக்குத் தேரில் அடிக்கடி வந்து சென்ற இளமையும் துடிப்பும் மிக்க ஒரு பெண்" என்ற நிரூபிக்கப்பட்ட வரலாற்று உண்மையை அடிப்படையாகக் கொண்டே இக்கூத்து கலை நயத்தோடு நெறிப்படுத்தப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் பலமுறை மேடையேற்றப்பட்ட இக்கூத்து, கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத் துறையின் பாரம்பரிய அரங்க விழாவில் முதல் முறையாக அரங்கேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழர் வாழ்வியலில் இசை, ஆட்டம், தாளம் ஆகிய மூன்றின் தொகுப்பான கூத்துக்கலை, வெறும் பொழுதுபோக்கைத் தாண்டி நீதி, அறம் மற்றும் வரலாற்றைக் கற்பிக்கும் உன்னத ஊடகமாகத் திகழ்கின்றது.

அந்த வகையில், மாமாங்கத் திருவிழாவைக் காண வந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் கலைப் பிரியர்கள் இரவென்றும் பாராது இக்கூத்தினைக் கண்டு களித்ததுடன், நிகழ்வுக்குப் பெரும் வரவேற்பையும் வழங்கினர்.